இந்தியாவின், மும்பையில் படப்பிடிப்பிற்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த இரு பொலிவூட் துணை நடிகர்களை பொலிஸார் உண்மையான தீவிரவாதிகள் என எண்ணி கைதுசெய்துள்ளனர்.

மும்பை, வசாய் நகரில் தீவிரவாதிகள் போல் வேடமிட்டிருந்த இவர்கள் இருவரும் அப் பகுதியில் சிகரெட் வாங்குவதற்காக சுற்றித்திரிந்தேபோதே பொலிஸார் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

பின்னர் இவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளையடுத்து, பொலிவூட் நடிகர்கள் ஹிர்த்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ரோப் ஆகியோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தீவிரவாதிகள் போன்று வேடமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

எனினும் பொது இடங்களில் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் சுற்றித்திரிந்ததற்காக இவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.