ஐஎஸ் தலைவர்  அல்  பக்தாதியை  இலக்கு வைத்து பிரிட்டன் தனது விசேட படையணியை களமிறக்கியுள்ளது என அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அல்பக்தாதியை கொலைசெய்யவேண்டும் அல்லது உயிருடன் பிடிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் பிரிட்டன் தனது இராணுவத்தில் உள்ள விசேட பிரிவான எஸ்ஏஎஸ் படையணியை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

விமானம் மூலம் தரையிறக்கப்பட்ட பி;ன்னர் நடவடிக்கைகளில் ஈடுபடும்  விசேட படையணியையே பிரிட்டன் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற குண்டுதாக்குதலிற்கு பின்னர் பக்தாதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்காவின் விசேட படையணியுடன் பிரிட்டனின் எஸ்ஏஎஸ் படைப்பிரிவு இணைந்துகொண்டுள்ளது.

பிரிட்டன் உட்பட மேற்குலக நாடுகளில்  பக்தாதியின் உறுப்பினர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என புலனாய்வு அமைப்பினர் அஞ்சுவதாக த  மிரர் தெரிவித்துள்ளது.

வரலாற்றில் மிக மோசமான தீயநபர்களில் ஒருவர் அல்பக்தாதி அவர் மத்திய கிழக்கிலும் உலகின் பல பகுதிகளிலும் மத்திய கால காட்டுமிராண்டிதனங்களில்  ஈடுபடுமாறு தன்னை பின்பற்றுபவர்களை தூண்டுகின்றார் என பிரிட்டிஸ் அரசாங்கத்தின் பயங்கரவாத விவகாரங்களிற்கான முன்னாள் ஆலோசகர் ரிச்சட் கெம்ப் தெரிவித்துள்ளார்

சர்வதேச வன்முறைகளை ஊக்குவிக்கும் அவரது நச்சு பிரச்சாரத்தை தடுப்பதற்காக உடனடியாக அவரை பிடிக்கவேண்டியுள்ளது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பினை பொறுத்தவரை அவர் மிக முக்கியமான நபர் அவரை பிடிப்பது அல்லது கொல்வது மிக முன்னுரிமைக்குரிய விடயம் என  மேற்குலகநாடொன்றின் முன்னாள் புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்

அவரது தலைமையின்  கீழ் மனித குலத்திற்கு எதிரான  படுபயங்கரமான வன்முறைகள்  இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரை உயிருடன் பிடிப்பது மிகச்சிறந்த விடயம் ஆனால் அவர் மேற்குலகின் படையினர் சிறிதளவும் இல்லாத பகுதியில் பதுங்கியுள்ளார் இதன் காரணமாக அவரை கைதுசெய்வது சவாலான விடயமாகவும் காணப்படுகின்றது எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

அல்அன்பார் பகுதியிலேயே அவர் பதுங்கியிருக்கலாம்,முன்னர் அவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த மௌசுலிற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் அவர் பதுங்கியிருக்கலாம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் 46 வயது தலைவரை தேடும் நடவடிக்கையில்  பிரிட்டனின் எம்16 புலனாய்வு பிரிவினர்,தொடர்பாடல்களை இடை மறித்து கேட்பதற்கான பிரிட்டனின் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்புஆகியன ஈடுபட்டுள்ளன.

கடும் ஆபத்தான ஈராக்கின் நகரங்களிலும் கிராமங்களிலும் அவரை கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.

பிரிட்டனின் எஸ்ஏஎஸ் படைப்பிரிவை சேர்ந்த 30 பேரும் விசேட கடற்படை பிரிவை சேர்ந்தவர்களும் பக்தாதியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

ஈராக்கின் கோல்டன் டிவிசன் எனப்படும் விசேட படைப்பிரிவினரும் இந்த நடவடிக்கைகளிற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றனர்.

குவைத்திலிருந்து ஆளில்லா விமானங்களை இயக்கும் பிரிட்டனின் விமானப்படை நாளொன்றிற்கு 12 மணித்தியாலத்திற்கு மேல் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

குறிப்பிட்ட ஆளில்லா விமானத்தில் நான்கு ஹெல்பயர் ஏவுகணைகள் காணப்படுகின்றன,இலக்கு இனம்காணப்பட்டதும் அதனை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளமுடியும்.

அல் அன்பர் மற்றும் மௌசூல் பகுதிகளில் கண்காணிப்பை மேற்கொண்டுள்ள இந்த ஆளில்லா விமானங்கள் அல்  பக்தாதியின் சகோதரர் அல்லது வாகனச்சாரதியினால் செலுத்தப்படும் காரொன்றை தேடி வருகின்றன.

பக்தாதி எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை,ஆனால் சந்தேகத்திற்கு இடமான அனைத்து விடயங்களையும் கண்காணித்து வருகின்றோம் என தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பக்தாதி எவ்வளவு அவதானமாகயிருந்தாலும் அவர் சிறிய தவறொன்றை செய்வார் அதற்காக காத்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இறுதியில் அவர்கள் தவறொன்றை செய்வார்கள்- அவர்கள் சிக்குவார்கள் அல்லது கொல்லப்படுவார்கள் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.