(இராஜதுரை ஹஷான்)

அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் அக்கறைக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நாட்டில் தற்போதும் நடைமுறையில் உள்ள அவசரகால சட்டத்தை இரத்து செய்ய வேண்டியதில்லை இன்றும் தேசிய பாதுகாப்பு  முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவசரகால சட்டத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம்  ஒரு சில விடயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டு செயற்படுவதை காண முடிகின்றது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் அவரகால சட்டத்தை நீக்குமாறு குறிப்பிட்டுள்ளமை  பொறுத்தமற்றதாகும். பிற நாடுகளின் அரச இராஜதந்திரிகளிடம் எமது நாட்டு பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை பெற்றுக் கொள்வது பொருத்தமற்றதாகும்.

ஜனாதிபதி  பாதுகாப்பு தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வாராயின் முப்படை தளபதிகளிடம் மாத்திரமே  ஆலோசனைகளை பெற வேண்டும்.  அத்துடன்  குண்டு தாக்குதலுடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விடயத்தில்   விரைவான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல் அவசியம். அடிப்படைவாத  குற்றச்சாட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மாத்திரமல்ல  இன்றும் இஸ்லாமிய அடிப்படைவாத்துடன் செயற்படும் அனைத்து தரப்பினருக்கு  ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நாட்டில் அடிப்படைவாதம் எதிர்காலத்திலும் எவ்வத  தாக்கங்களையும் ஏற்படுத்தாத  வகையில் சட்டங்கள் இறுக்கமாக்கப்பட வேண்டும். 

மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியலில் தெரிவு செய்யப்பட்டவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகவே தெரிவு குழுவில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவை நீக்குவது பொருத்தமானது. இவ்விடயம் தொடர்பில்  தான் சபாநாயகருக்கு எழுத்து மூல அறிவித்தலை விடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.