(எம்.மனோசித்ரா)

குருணாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர் தொடர்பாக விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள 6 பேர் அடங்கிய குழு மீது தமக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது எனத் தெரிவித்து குருணாகல் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை பாதுகாப்பிற்கான அமைப்பு என்பன தமது எதிர்ப்பினைத் வெளியிட்டுள்ளன. அத்தோடு இந்த குழுவிற்கு தாம் எந்த சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பினை வழங்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார அமைச்சினால் 6 பேர் அடங்கிய விஷேட குழு தொடர்பான தகவல்கள் நேற்று  செவ்வாய்கிழமை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வைத்தியசாலையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை பாதுகாப்பிற்கான அமைப்பு என்பன குருணாகல் வைத்தியசாலையில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. 

இதன் போது கருத்து தெரிவித்த குருணாகல் வைத்தியசாலை பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி வைத்தியர் இந்திக ரத்னாயக்க,

நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு மீது எமக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இறுதியில் சாட்சி வழங்கியவர் பாரிய நெருக்கடிக்குள்ளாகலாம். எனவே வைத்தியசாலையில் உள்ள அதிகாரிகள் யாரும் இந்த குழுவினால் முன்னெடுக்கப்படுகின்ற எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்காமலிருப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.