சீனா­வுடன் அண்­மையில் செய்து கொள்­ளப்­பட்ட பாது­காப்பு ஒத்துழைப்பு உடன்­பாட்­டுக்கு அமைய, இலங்கை இரா­ணுவ மற்றும் காவல்­து­றையைக்கொண்ட முத­லா­வது அணி பயிற்­சிக்­காக அடுத்த வாரம்  பீஜிங் செல்­ல­வுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அண்­மைய சீனப் பயணத்தின்போது, சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்­குடன் நடத்­திய பேச்­சுக்­களையடுத்து, மே 14ஆம் திகதி இந்த பாது­காப்பு ஒத்துழைப்பு உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்­டது.

திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­படும் இடங்­க­ளுக்கு பாது­காப்பு வழங்குதல் உள்­ளிட்ட விட­யங்­களைக் கொண்­ட­தாக இந்தப் பயிற்சிகள் அமைந்­தி­ருக்கும் என்று கூறப்­ப­டு­கி­றது.

இது­கு­றித்து சீன தூத­ரக பேச்­சாளர் ஒருவர் தகவல் வெளி­யி­டு­கையில்,

“இலங்கை படை­யி­னரின் மற்றும் பொலி­சாரின் ஆற்­றலைக் கட்­டி­யெ­ழுப்பும் உத­வி­ளையும், தேசிய பாது­காப்பை உறுதிப்படுத்துவதற்­கான கரு­வி­க­ளையும் சீனா வழங்கும்.

காவல்­துறை மற்றும் பாது­காப்பு படை­யி­னரின் முதல் தொகு­தி­யி­ன­ருக்­கான பயிற்சித் திட்டம் அடுத்­த­வாரம் ஆரம்­ப­மாகும்.

நாங்கள் எமது இரா­ணு­வத்­தி­னரை இங்கு அனுப்பப் போவதில்லை.அதற்குப் பதி­லாக, இலங்கை படை­யி­னரின் ஆற்றலை கட்டியெழுப்பவுள்ளோம்.

எமது பாது­காப்பை அவர்கள் மேற்­கொள்­வார்கள் என்று நம்புகிறோம். எனவே, எமது படை­யி­னரை இங்கு அனுப்ப வேண்டிய தேவை இல்லை. இது எமது கொள்கை இல்லை. இதற்கு மேலதிகமாகவும் எம்மிடம் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.