அரசாங்கத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை கண்டு எதிர் தரப்பினர் அச்சம் கொள்கின்றது. இதன் காரணமாகவே  தேவையற்ற  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அதனூடாக அரசியல் இலாபம்  தேடிக் கொள்கின்றது என  கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.

 2020ம் ஆண்டு  ஆட்சியை  கைப்பற்றும் முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது என ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்  தயாகமகே தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று  செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது அரச வருமானம்  முறையற்ற அரசமுறை  கடன்களுக்கு  வட்டியினை  செலுத்தும் அளவிற்கே  காணப்பட்டது. 

ஆனால்  நிலைமை தற்போது  முழுமையாக மாற்றமடைந்து விட்டது. கடந்த அரசாங்கம்  பெற்ற முறையற்ற அரசமுறை கடன்கள் பெருமளவில் வட்டியுடன் மீள் செலுத்தப்பட்டுள்ளது.   அரசாங்கம் பல  புதிய  கொள்கை திட்டங்களை வகுத்தது.

 அனைத்து  திட்டங்களுக்கும் எதிர் தரப்பினரே தொடர்ந்து தடைகளை ஏற்படுத்தினார்கள். அரசியலமைப்பிற்கு முரணாக அரசியல்  சதியின் ஊடாக   ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி 52   நாட்கள் முறையற்ற நிர்வாகத்தை மேற்கொண்டமையின் விளைவு  இன்றும் தொடர்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சி நவீன திட்டங்களை உள்ளடக்கிய புதிய  பல கொள்கை திட்டங்களை வகுத்து அதனடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்கின்றது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு இன்று  எதிர் தரப்பினர் அச்சம் கொள்கின்றார்கள்.

 இதன் காரணமாகவே  போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து  அதனூடாக அரசியல் இலாபம் தேடிக் கொள்கின்றார்கள் என அவர் இதன் போது தெரிவித்தார்.