கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், வைத்தியசாலை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ வேண்டாம்.

பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் நடைபெறும்.

இன்னும் சில மணி நேரத்தில் தாயாகப் போகும் கர்ப்பிணிக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். பிரசவத்துக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் விபரங்கள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை விபரங்கள், மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஏ.டி.எம் அட்டை ஆகியவற்றை  முதலில் ஒரு பையில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிலருக்கு பிரசவத்தில் சிக்கல் இருப்பதாக மகப்பேறு வைத்தியர் எதிர்பார்த்தால், பிரசவத்தேதிக்கு முன்னதாகவே வைத்தியசாலைக்கு வந்து தங்கலாம்.

‘குழந்தையைப் பெற்றெடுக்க சக்தி வேண்டும்;அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ’ என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் வைத்தியசாலைக்குச் செல்வதுதான் நல்லது. 

காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமப்படலாம்.

கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். 

 மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால்,வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

மிகவும் தேவைப்பட்டால், வைத்தியரின் ஆலோனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர்,பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம்.இதனால் வயிறு நிரம்பியிருக்காது;பிரசவத்துக்கும் தடை போடாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

வைத்தியசாலைக்கு சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு வைத்தியர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார்.

கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால்,கர்ப்பிணியை அறைக்குள் நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயார் நிலையில் அவர் காணப்படுவார்.