உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் உள்ளிட்ட மகாவலி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் விரைவில் நிறைவு செய்து அவற்றின் நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  இந்த பணிப்புரையை விடுத்தார்.

உமா ஓயா, மினிப்பே கால்வாய், வயம்ப கால்வாய், எஹல எலஹெர உள்ளிட்ட நீர்ப்பாசனத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகளை கேட்டறிந்த ஜனாதிபதி  குறித்த காலத்திற்கு முன்னர் இத்திட்டங்களை நிறைவுசெய்து மக்களுக்கு துரிதமாக நன்மைகளை பெற்றுக்கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். 

மேலும் மகாவலியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் பங்களிப்பை மேலும் அதிகரிக்கும் செயற்பாடுகள் புதிய கருத்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மகாவலி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, கரையோர பாதுகாப்பு திணைக்களம், அரச மரக்கூட்டுத்தாபனம், தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகார சபை, பொறியியல் மத்திய ஆலோசனை பணியகம் உள்ளிட்ட மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக மீளாய்வு செய்யப்பட்டது.

மரநடுகைத் திட்டங்களுக்கு முன்னுரிமையளித்து வன அடத்தியை அதிகரிப்பதற்கு மகாவலி வலயத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றாடல் பாதுகாப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. 

அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் குறித்த நிகழ்ச்சித்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மொரகஹகந்த - களுகங்கை அபிவிருத்தி திட்டம் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், இத்திட்டத்தின் காரணமாக காணிகளை இழந்தவர்களை மீளக் குடியமர்த்தியுள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட இம்மக்களின் பொருளாதார, சமூக பின்புலத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் பற்றியும் மீளாய்வு செய்யப்பட்டது. 

மேலும் மொரகஹகந்த - களுகங்கை பல்நோக்கு திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மின்சார நிலையத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.

கடந்த 12 மாத காலப்பகுதியில் இதன் மூலம் 1100 மில்லியன் ரூபா நேரடி வருமானம் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க ஆகியோரும் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினதும் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.