(நா.தினுஷா) 

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்துக்கு எதிராக 1970 களின் பிற்பகுதியிலும் 1980களின் முற்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களைப் போன்றே இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. 

 அமிர்தலிங்கம்  ஜனநாயகத்துக்காக பாடுபட்ட ஒரு தலைவர். அதேபோன்றே ரிஷாத் பதியுதீனும் ஜனநாயக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர். குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன என்பதற்காக உடனடியாக அவரைப் பதவி விலக்க முடியாது என்று சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.  

மேலும், பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் பின்னரே ரிஷாத் பதியுதீன் மீது இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும்,  சர்வதேச பயங்கரவாதததின் பின்னணியிலேயே  கடந்த ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன.  இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக முன்னெச்சரிக்கை கிடைத்தும் கூட அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாமல் போனமை கவலைக்குரியது.  அரசாங்கத்தின் பிழையை நாங்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களுக்கான அச்சுறுத்தல் வெளிநாடுகளுக்கும் இருந்த போதிலும் அவர்களாலும் இதனை தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளது.  

தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து சாட்சிகளும் வெளிப்படையாக மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.  விசாரணை தகவல்களை மூடிமறைக்கவோ அல்லது மற்றவர்களை பாதுகாக்கும் வகையிலோ அரசாங்கம் செயற்பட போவதில்லை.  

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை விட  அவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையா என்பது தொடர்பில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். எவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும்  அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பது அவசியமாகும்.  

கடந்த வருடத்தின் அரசியல் நெருக்கடி சந்தர்ப்பத்தில்  அவர்களின் சட்டவிரோத அரசாங்கத்துக்கு  ஆதரவளிக்கக் கோரி ரிஷாத் பதியுதீனுக்கு பாரிய அழுத்தத்தை பிரயோகித்தனர். ஆனால் அவர் அதற்கு இடமளிக்காமல்  வெளிநாட்டுக்கு சென்றிருந்தார்.  அன்று பதியுதீனின் அழைப்பை ஏற்று அந்த அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்கியிருப்பாராக இருந்தால்   இன்று அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கான வாயப்புக்கள் ஏற்பட்டிருக்காது.  எனவே இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும்  அரசியல் நோக்கங்களுக்காகவே முன்வைக்கப்படுகின்றன.  

அதேபோன்று  ரிஷாத் பதியுதின்  ஜனநாயகத்துக்காக செயற்படும்  முஸ்லிம் தலைவர். குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவர் நாட்டை விட்டு தப்பியோடவில்லை.  ஆகவே அவர் மீது விசாரணைகளை முன்னெடுக்க முடியும்.  1977 ஆண்டின் பின்னர்  ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்ட தமிழ் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் அப்பாபிள்ளை  அமிர்தலிங்கம் செயற்பட்டார்.  இதுபோன்ற  எதிர்ப்பு  அன்று அமிர்தலிங்கத்துக்கும் இருந்தது.  

அன்று அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது  நான் உட்பட இடதுசாரி கட்சிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டோம்.  ஜனநாயகத்துக்காக செயற்படுபவர்களை குற்றவாளிகளாக மாற்றினால் இறுதியில் பயங்கரவாத தலைவர்களே உருவாகுவார்கள் என்றும்  குறிப்பிட்டோம்.  இறுதியில்  தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க எவரும் இருக்க வில்லை.  பிரபாகரன், பத்மநாபா ,உமா மகேஷ்வரன் போறோர்களே தமிழ் மக்களின் தலைவர்களாக இருந்தனர்.  

1988 ஆம் ஆண்டு   சிறந்த மாற்றத்தை கொண்டுவந்தோம்.  அன்று ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டிருந்தாலும் தமிழ் மக்களின் நலனுக்காக  13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம்.  இவ்வாறே எமது அரசியல் வரலாறு இருந்துள்ளது.  

  அன்றைய நிலைமை இன்று மீண்டும்  தோன்றியுள்ளது.  ஜனநாயக தலைவர்களை எதிர்த்து  பயங்கரவாத தலைவர்களை உருவாக்கவே முயற்சிக்கின்றனர்.  அதேபோன்று அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டி  அவர்களையும் அடிப்படைவாதிகளாக்கும் முயற்சிகளே இடம்பெற்று வருகின்றன. அன்று  தமிழ் மக்கள் அனைவரையும் விடுதலை புலிகளாகக்  தெற்கில் காட்டி சிங்கள அடிப்படைவாத்தை தூண்டினர்.  

ஆனால் அந்த இனக்கலவரங்களை தூண்டியவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. நாங்களே தமிழ் மக்களின்  உரிமைகளை பாதுகாத்தோம். ஆனால் சிங்கள அடிப்படைவாதம் மாத்திரம் அழியாமல் உயிர்ப்புடன் உள்ளது.    அன்று அமிர்தலிங்கத்துக்கு நேர்ந்ததை தற்போதுள்ள ஜனநாயக தலைவர்களுக்கு ஏற்படுத்த வேண்டாம்.  அதற்கு  இடமளிக்க போவதும் இல்லை என்றார்.