விமானத்தில் புகைபிடித்து சக பயணிகள் முகத்தில் ஊதிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குவைத்தில் இருந்து "இண்டிகோ ஏர்லைன்ஸ்" விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்து கொண்டிருந்தது.அதில் வந்த பயணி ஒருவர், விமான பாதுகாப்பு சட்டத்தை மீறி பறந்து கொண்டிருந்த விமானத்தில், சிகரட் பற்ற வைத்து,சக பயணியர் முகத்தில் புகையை ஊதியதால் விமானத்தில் சக பயணிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு,சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.விமான பணிப் பெண்கள் அவரிடம் இருந்து வலுக்கட்டாயமாக சிகரட்டை பறித்து அணைத்தனர்.

இதனால் கோபமடைந்த அந்த பயணி வாய்த்தர்கத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் விமானத்தின் விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு தகவல் கொடுத்தார். 

குறித்த விமானம் தரையிறங்கியதும், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் ஏறி, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.