(செ.தேன்மொழி)

மாதம்பை பகுதியில்மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபிரிகஸ்வெல பாடசாலைக்கருகில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த இரு பெண்களை நபரொருவர் வழிமறித்து அவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது படுகாயமடைந்த பெண்கள் இருவரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து கல்முருவ - பல்லேகெலே பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொடகந்த கங்கானம்லாகே நிலா சமந்தி என்பவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய பெண் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் சந்தே நபர் உயிரிழந்த பெண்ணின் கணவர் என அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் கணவருக்குமிடயில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளின் காரணமாக , இவர்கள் இருவரும் சில மாதகாலமாக பிரிந்தே வாழ்ந்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.