(எம்.எப்.எம்.பஸீர்)

ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணைந்து சிரியாவில் பயிற்சிகளை முன்னெடுத்திருந்த போது  2015 ஆம் ஆண்டு  கொல்லப்பட்ட மொஹம்மட் சப்ராஸ் நிலாம் அஹமட்  என்பவருக்கு கராத்தே கற்றுக்கொடுத்த, சர்வதேச  கராத்தே சங்கம் ஒன்றின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஒருவரை 90 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நாரஹேன்பிட்டி பொலிசாருக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. 

தேசிய உளவுத்துறை வழங்கிய தகவல்களுக்கு அமைய  கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தையைச்  சேர்ந்த துவான் மாஸ்டர் என அறியப்படும்  துவான் அசார்தீன் சாலிஹீன் சல்தீன் என்பவரே நாரஹேன்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டு இவ்வாறு 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான அனுமதி பெறப்பட்டவராவார். 

இந் நிலையில் அமைச்சிடம் இருந்து பெற்றுக்கொண்ட அந்த அனுமதி கொழும்பு மேலதிக நீதிவானுக்கு இன்று நாரஹேன்பிட்டி பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்,  அவரை மீள ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி மேர்பார்வைக்காக முன்னிலைப்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்க்ப்பட்டது. 

துவான் மாஸ்டருடன் சேர்த்து  மற்றொரு நபரும்  தேசிய உளவுத்துறை ஆலோசனைக்கு அமைய கைது செய்யப்பட்டு மன்றில் ஆஜர் செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக் காவலின் கீழ் நாரஹேன்பிட்டி பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர்  சமூக வலைத்தளங்கள் ஊடாக பயங்கரவாத ஆதரவு பிரச்சாரங்களை செய்ததாக  தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே 21/4 தற்கொலை தாக்குதலில் ஷங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொலைபேசியில் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறி பம்பலபிட்டி பொலிசாரால்  கைது செய்யப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த  மொஹம்மட் முபாரக் முப்ஷல் எனும் சந்தேக நபரையும் 90 நாள் காவலில் எடுத்து விசாரிக்க  பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்  தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட தெஹிவளை ட்ரொபிகலின் தங்குவிடுதி தற்கொலை குண்டுதாரியான அப்துல் லதீப் ஜமேல் மொஹம்மட்டின் மாமனார் முறையிலான சந்தேக நபர் ஒருவரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.