ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ; திருநாவுக்கரசர் நம்பிக்கை

By T Yuwaraj

27 May, 2019 | 06:50 PM
image

ஐந்து ஆண்டுகள் வேகமாக கடந்து விடும். அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவரும், திருச்சி தொகுதியின் மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது...

“ராகுல் காந்தி மிக சிறப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தல் தோல்வி காரணமாக ராகுல் காந்தி பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ராகுல் காந்தி தான் தலைவராக நீடிக்க வேண்டும் என்பது நாடு முழுதும் இருக்கும் காங்கிரஸின் கோடிக்கணக்கான தொண்டர்கள் நாட்டு மக்களின் விருப்பமும் அதுதான். 

ஒரு தேர்தலில் ஏற்படும் வெற்றியோ தோல்வியோ, ஒரு தலைவரின் செல்வாக்கையோ எதிர்காலத்தையோ தீர்மானித்து விடாது. இந்த தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு எப்படி ராகுல்காந்தியை மட்டும் பொறுப்பாக்க முடியும்? நாடு முழுவதும் இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாற்றங்கள் செய்ய வேண்டும் என ராகுல் காந்தி விரும்புகிறார். 

அதற்கான அதிகாரத்தை செயற்குழு அவருக்கு கொடுத்திருக்கிறது. அவருக்கு வயதிருக்கிறது. மன்மோகன் சிங் இருக்கும்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் பிரதமராக வந்திருக்கலாம். மன்மோகன் சிங் பிரதமர் பதவியை தருவதற்கு தயாராக இருந்தார். பிரதமராவது தான் வாழ்க்கை இலட்சியம் என அவர் நினைத்திருந்தால், எப்போதோ பிரதமராகி இருப்பார். இந்த ஐந்து ஆண்டுகள் வேகமாக சென்று விடும். அடுத்த பிரதமர் நிச்சயமாக ராகுல் காந்தி தான். நாங்கள் அவருக்கு பக்கபலமாக இருப்போம். அவருக்காகவும், கட்சியை பலப்படுத்தவும் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம்.” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right