குருநாகலில் கைதுசெய்யப்பட்ட மகப்பேற்று வைத்தியர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை தொடர்பில் பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கடந்த வெள்ளிக்கிழமை இரவு குருநாகல் வைத்தியசாலையின் பிரசவம் மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் மொஹமட்  ஷாபியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் அவர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை குறித்த வைத்தியர் மீது கருக்கலைப்பு மற்றும் சிசேரியன் தொடர்பில்  பல சர்ச்சைக்குரிய  கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரு பெண்கள் குறித்த வைத்தியர் தொடர்பில் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த வைத்தியர் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் அறியத்தருமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து தற்போது குறித்த வைத்தியர் தொடர்பிலான குற்றங்களை விசாரிப்பதற்கு விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.