(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்கட்சி உறுப்பினர்கள் பங்குபற்றாமை குறித்து கவலையடைவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் எதிர்தரப்பு ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். 

சிவில் சமூக தொழிற்சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

மத்ரஸாக்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பேச்சுவார்த்தைககள் இடம்பெற்று வருகின்றன. ஷரியா பல்கலைக்கழகம் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெயர்பலகைகள் மும்மொழிகளில் மாத்திரமே காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு முஸ்லிம் மக்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்தனர். இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இங்குள்ள முஸ்லிம் மக்கள் பயங்கரவாதத்திற்கு துணை போகவில்லை. ஆனால் சவுதி போன்ற நாடுகளில் பொது மக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை ஆதரிக்கின்றனர். 

அவர்களைப் போன்று அடிப்படைவாதிகளாகவும் மதவாதிகளாகவும் செயற்பட ஆரம்பித்து பயங்கரவாத்தை உருவாக்கிவிடக் கூடாது. இது தொடர்பில் அனைவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கபட வேண்டும். அதன் போது சந்தேகநபர்களை கைது செய்யும் அதே வேளை நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும். நிரபராதிகளை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பதால் எந்த பலனும் கிடைக்காது. 

நாட்டில் இன, மத , மொழி பாகுபாடின்றி வெளிப்படைத்தன்னை பேணப்பட வேண்டும். எனவே தான் இது குறித்து ஆராய்வதற்கு விஷேட பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது குறிப்பிட்டார்.