கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக நுழைந்த சம்பந்தன் உயிருடன் வெளியேறியதே அதிசயம் தான். நான் மாத்திரம் முகாமுக்குள் இருந்திருந்தால் அவர் உயிருடன் வெளியேறி இருக்கமாட்டார் என நவ சிஹல உறுமய கட்சியின் தலைவர்  சரத் மனமேந்திர தெரிவித்தார்.


ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் என்றாலும் நாட்டின் சட்டங்களை மீறி செயற்பட முடியாது. மிகவும் பழமையான அரசியல்வாதி என்பதால் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதைவிடுத்து காட்டுமிராண்டித் தனமாக செயற்பட முடியாது எனவும் தெரிவித்தார்.


கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


சம்பந்தன் முழு இலங்கையையும் பிரதிநிதித்துவம் படுத்தும் எதிர்க் கட்சித் தலைவராவார். வடக்குக்கு மாத்திரம் அவர் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை.


எந்தவொரு இராணுவ முகாமுக்குள்ளும் நுழைவதாயின் அதற்கு ஒரு முறை உண்டு. இது இராணுவத்திலிருந்து விலகிய வீரர்களுக்கும் பொறுந்தும்.


இராணுவ முகாமுக்குள் பலவந்தமாக சென்ற சம்பந்தன் உயிருடன் வெளியேறியதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். எனினும் நான் இராணுவ முகாமுக்குள் இருந்திருந்தால் உயிருடன் வெளியேற விட்டிருக்க மாட்டேன்.


இராணுவ வீரர்கள் நாட்டை பாதுகாக்க உள்ளனர். தனிப்பட்ட நபர்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் இல்லை. இதனை ஒவ்வொரு அரசியல்வாதியும் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்தியா ஹிந்துஸ்தானி, பாகிஸ்தான் முஸ்லிம்  என்றால் நாங்கள் சிங்களவர்கள். நாம் நாட்டில் ஜாதி மதம் பேதமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் எம்முடன் விளையாட வேண்டாம்.


30 ஆயிரம் இராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து மீட்டெடுத்த எமது நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுச் செல்ல சம்பந்தன் அல்ல வேறு யாருக்கும் முடியாது.


எம்முடன் கலந்துரையாடி இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுகொள்ள வேண்டும். அதைவிடுத்து காட்டு மிராண்டித் தனமாக செயற்பட வந்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றார்.