இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 12 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 297 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக 102 பந்துகளை எதிர்கொண்டு 3 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்கலா 116 ஓட்டத்தையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் லியாம் பிளங்கட் 4 விக்கெட்டுக்களையும், டொம் குர்ரன், மார்க்வூட் மற்றும் லியாம் டாவ்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

298 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 12 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் வின்ஸ் 64 ஓட்டத்தையும், ஜோஸ் பட்லர் 52 ஓட்டத்தையும், கிறிஸ் வோக்ஸ் 40 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணிசார்பில் ஜேசன் பெஹ்ரண்டோர்ப், கேன் ரிச்சர்ட்ஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், நெதன் கொல்டர்-நைல், அடம் ஷாம்பா, நெதன் லியோன், மார்கஸ் ஸ்டோனெனிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள பயிற்சிப்போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி இலங்கையையும், இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தானையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

photo credit : ‍ICC