அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களைப் பெற்று நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் செயற்பாடுகளில் அந்நடவடிக்கைகளை மீளாய்வு செய்யும் சபையொன்றை மாதாந்தம் கூட்டுவதற்கு ஜனாதிபதி  தீர்மானித்துள்ளார்.

Image may contain: 3 people, people sitting, table, crowd and indoor

அத்துடன் அதன் முதலாவது கூட்டம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

மகாசங்கத்தினர் உட்பட அனைத்து சமயத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் சிரேஷ்ட அமைச்சர்கள், ஆளுநர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள், ஜனாதிபதியின் செயலாளர், பாதுகாப்பு செயலாளர். பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள் மற்றும் பதில் கடமை பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு ஒருமாத குறுகிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட அனைவரும் ஜனாதிபதிக்கு முதலில் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

Image may contain: 5 people, people sitting and indoor

மேலும் அனைத்து தரப்பினர்களினதும் கருத்துக்கள், முன்மொழிவுகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கான தளமொன்றை ஏற்படுத்திக்கொடுத்து இத்தகையதொரு கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்திருப்பதையிட்டு ஜனாதிபதிக்கு அவர்கள் நன்றி தெரிவித்ததுடன் இது காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்தபோதும் உலகில் ஏனைய நாடுகள் இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பில் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் படி நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும் என்று குறிப்பிட்டார்.

Image may contain: 3 people, people sitting, table and indoor

இந்த சர்வதேச நிலைமைகளை கருத்திற்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த சபையை மாதத்திற்கொருமுறை கூட்டுவதற்கு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள், பலவீனங்கள் இருக்குமானால் அதுபற்றி இங்கு கருத்துத் தெரிவிக்க முடியும் என்றும் கருத்துக்கள், முன்மொழிவுகள், பிரச்சினைகள் மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கும் இச்சபை திறந்த ஒரு தளமாகும் என்றும் குறிப்பிட்டார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுவதற்கு கடந்த சில தினங்களாக தனக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து அவர்கள் அனைவரும் திருப்தியுடன் உள்ளதாகவும் தெரிவித்தார். 

அதற்கேற்ப சுற்றுலா பயணிகளுக்கு சில நாடுகள் விதித்திருக்கும் தடையை விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிகக் குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவர முடியும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கோணத்தில் நோக்காது அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் இந்த சம்பவங்கள் தொடர்பில் பிரதான ஊடகங்களினதும் சமூக ஊடகங்களினதும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும் என்று கருத்துத் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டின் பாதுகாப்பு துறையின் முழுமையான ஒத்துழைப்பு அனைத்து மக்களுக்கும் கிடைப்பதை பாராட்டிப் பேசினார்.

பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பது தொடர்பிலும் ஆயுதங்கள் உள்ளிட்ட யுத்த உபகரணங்கள் கிடைப்பது தொடர்பிலும் ஆழமாக ஆராய்வதற்கு விரிவான விசாரணைகள் அவசியமாகும் என்று கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். 

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் இங்கு கருத்துத் தெரிவிக்கும்போது இந்த சம்பவங்களின்போது அனைத்து சமயத் தலைவர்களினதும் பொறுப்புக்கள் மிகவும் பாரியது என்றும் நாட்டின் தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் அனைவரின் மீதும் விரிவானதொரு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மெளலவி எம்.ஐ.எம்.றிஸ்வி கருத்துத் தெரிவிக்கும்போது அனைவருக்கும் நாடே பிரதானமானது என்றும் நாட்டுக்காக எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆளுநர்களும் இங்கு தமது கருத்துக்களை முன்வைத்தனர். பிரஜைகள் பொலிஸ் பிரிவுக்கு பதிலாக பிரதேச பிரஜைகள் பாதுகாப்பு குழுக்களை பலமாகவும் முறையாகவும் தாபிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு விரிவான சேவையை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

Image may contain: one or more people, people sitting, table and indoor

இந்த அனைத்து விடயங்கள் குறித்தும் விரிவாக கவனம் செலுத்துவாக குறிப்பிட்ட ஜனாதிபதி  தேசிய பாதுகாப்பு சபையில் இந்த அனைத்து விடயங்கள் பற்றியும் கலந்துரையாடி முறையானதொரு நிகழ்ச்சித்திட்டத்தினூடாக அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க அபேகுணசேகர கருத்துத் தெரிவிக்கும்போது போலியான செய்திகளை தவிர்ப்பது பற்றிய புதிய சட்டங்களை ஆக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். 

முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்களும் கருத்துத் தெரிவித்ததுடன், இந்த பயங்கரவாத சம்பவங்கள் சர்வதேச பயங்கரவாத நடவடிக்கையாகும் என்பதால் சர்வதேச புலனாய்வுத் துறையின் ஒத்துழைப்பை பெற்று அதன் செயற்பாடுகளை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை முன்வைத்தனர்.