(எம்.மனோசித்ரா)

சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது பாதணிகளை அணிந்து வருகின்றமை, மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப் படுகின்றமை தொடர்பில் அறிவித்திருந்தும் அவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போதுள்ள பாதுகாப்பு துறைக்கு கேக் வெட்டும் கத்திக்கும், வாளுக்கும் வித்தியாசம் தெரியாமல் போயுள்ளது என மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார். 

முஸ்லிம் மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். சோதனை நடவடிக்கைகள் என்ற பெயரில் பாதுகாப்பு துறை மக்களுக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முஸ்லிம் மக்களையும், பள்ளிவாசல்களையும் சோதனைக்குட்படுத்துவதால் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடாது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. 

பயங்கரவாத செயற்பாடுகள் எந்த இடங்களில் முன்னெடுக்கப்பட்டதோ அந்த இடங்களில் தான் குழுக்களை அமைத்து ஆராய வேண்டும். நாம் இப்போதும் வலியுறுத்துவதென்னவென்றால் தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பை தடை செய்யும் எந்த பயனும் கிடையாது. தடை செய்யப்பட வேண்டிய அமைப்புக்கள் இன்னும் எத்தனையோ உள்ளன. அவை குறித்து யாரும் தேடவில்லை. இவற்றுக்கு தலைமை தாங்குபவர்கள் இனங்காணப்பட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை. பாதுகாப்பு துறையில் சிறந்த தலைமைத்துவம் இன்மையே இதற்கான காரணமாகும் என தெரிவித்துள்ளார்.