(இராஜதுரை ஹஷான்)

நாடு   பல நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ள நிலையில்   மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளமை  கேலி  கூத்தானது.  இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒருபோதும் வெற்றிப் பெறாது. இதற்கு  அனைவரும் எதிர்ப்பினையே தெரிவிப்போம். எங்களின் அரசாங்கத்தை  வீழ்த்தி விட்டு மக்கள் விடுதலை முன்னணி  யாருக்கு பிரதமர் பதவியை வழங்கபோகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில்  சாட்டியுள்ள குற்றங்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இவ்விடயத்தில் எனது  தனிப்பட்ட நிலைப்பாட்டினை  தெளிவாகவும், உறுதியாகவும் குறிப்பிட்டு விட்டேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரநிதிகளாக தெரிவு செய்வதற்கான பிரதான காரணம்  மக்களின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் பேசப்படும் என்பதே. என்னை தெரிவு செய்த  மக்களின் கருத்துக்களுக்கும், அரசியல் அபிப்பிராயங்களுக்கும் அப்பாட்பட்டு ஒருபோதும்  செயற்பட  முடியாது.

குண்டு தாக்குதலில் பெறுமளவில்  கத்தோலிக்க மக்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இன்றைய நிலையில் இவர்களுக்கு   முறையான   நியாயம் கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  எதிர் தரப்பினர்  பல  காரணிகளை முன்னிலைப்படுத்தி  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை  சமர்ப்பித்துள்ளார்கள். இதில் உள்ளடக்கியுள்ள   குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் எம்மால் நியாயப்படுத்த முடியாது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவாக செயற்படும் எனக்கு பல  எதிர் விளைவுகள் ஏற்படலாம். அவற்றை  எதிர்க் கொள்ள தயாராக உள்ளேன். குறித்த  பிரேரணை தொடர்பில்  ஒட்டுமொத்த மக்களின் அபிப்பிராயங்களையும் கோருவது முறையானது. அரசியல்வாதிகளின் கருத்துக்கள் பல விடயங்களை   மையப்படுத்தி மாற்றமடையலாம் என்றார். 

.