உலகம் சுற்றும் வாலிபர் மோடி. அவர் போகாத தேசம் இல்லை. இனி அவர் விண்வெளிக்குத்தான் சுற்றுலா போக வேண்டும். அவர் ஓர் இந்துவாதி,  ஏழைகளின், விவசாயிகளின் எதிரி என்று இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே  எதிர்க் கட்சிகள் கடும் பிரசாரங்களை பிரதமர் மோடிக்கு எதிராக  முன்வைத்தன. 

மோடி தனது முன்னைய ஆட்சியில்  பண மதிப்பு செய்தமை சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கச் செய்தது. அதன் வெளிப்பாடு அதன் பிறகு நடந்த சில மாநில தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியைச் சந்திக்க வைத்தது. மற்றும் பசுவுக்காக மனிதர்கள் கொல்லப்பட்டமை, மதவாதம் என்பன பாரிய பிரச்சினையாக எல்லோராலும் மோடிக்கு எதிராகப் பேசப்பட்டது.  அவரை இந்தியாவின் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்த்தன. 

சாமானியர்கள் கூட மோடிக்கு எதிரான மனநிலையில் இருப்பது போலவே சில மாநிலங்களுக்கு அவர் செல்லும் போது  'கோ பேக் மோடி' என சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் வலுத்தன.  ஆயினும் நான் ஏழை மகனின் தாய் என்று அடிக்கடி கூறிக்கொள்ளும் மோடி தன் மீதான அத்தனை தாக்குதல்களையும் முறியடித்து மீண்டும்  இந்தியப் பிரதமராக தனிப் பெரும்பான்மையடன் அரியணை ஏறுகின்றார். இது எப்படி சாத்தியமானது என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.

 தேர்தலில் பா.ஜ.க. இமாலய வெற்றி பெற்றுள்ளது. பல மாநிலங்களில் பா.ஜ.க. காங்கிரஸை விரட்டியடித்துள்ளது. பா.ஜ.க.வின் வெற்றி எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி  மிக மோசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமெதி தொகுதியிலேயே அக்கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தோல்வியடைந்துள்ளார். அவரது சகோதரி பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை கட்சிக்கு புதிய இரத்தத்தைப் பாய்ச்சும் என எதிர்பார்க்கப்பட்டமை பொய்த்து விட்டது.  பல தொகுதிகளிலும் காங்கிரஸின் நட்சத்திர வேட்பாளர்கள் தோல்வியைச் சந்தித்துள்ள னர்.

தேர்தல் முடிவுகளானது  இரண்டில் ஒரு இந்தியர் மோடி பிரதமராக வேண்டும் என்று வாக்களித்துள்ளனர் என்று தெரிவிக்கின்றது. கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி 332 தொகுதிகளை வென்றிருந்த நிலையில் இந்த முறை அதனை விட அதிக மாக 350 தொகுதிகள் வரை வென்றுள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் மிகத் தீவிரமான பிரசாரத்தை மேற்கொண்ட நிலையிலும் அக்கட்சியால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.  காங்கிரஸால் எதிர்க் கட்சி என்ற  நிலையைக் கூட எட்ட முடியாமல் போயுள்ளது. 

தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு கள் போலவே மோடி வென்றுள்ளார். இந்த வெற்றி  காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை தெளிவானஇ முழுமையான தந்திரங்களை மோடிஇ அமித்ஷா கூட்டணி பயன்படுத்தியுள்ளது என்பதை எதிரொலிக்கச் செய்துள்ளது. வாக்காளர்கள் தேர்வுகளிலிருந்து எதிர்க் கட்சிகளின் கருத்துகளுக்கு எதிர்க் கருத்து தெரிவிப்பது வரை இக் கூட்டணி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். 

குறிப்பாக இத் தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட அனைவருமே மக்களின் பிரச்சினையைத் தான் பேசினார்கள். பொருளாதார வளர்ச்சி யில் தொய்வு, விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட மக்களின் மேம்பாடு சார்ந்த விஷயங்களைப் பேசினார். கோடிக்கணக்கான பணக் கொள்ளையில் ஈடுபட்டு விட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்ற தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நிரவ் மோடி, லலித் மோடி போன்றவர்களை  மோடி அரசாங்கம் காப்பாற்றுவதாகவும்  சாதாரண  விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும் கூறினர்.  ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ராகுல்  மோடிக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்றார்.

அத்தோடு பண மதிப்பிழப்பு செய்த போது வரிசையில் நின்று ஏழைகள்தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலர் மரணத்தைக் கூட தழுவினர். இது மோடி மீது பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியது.  அது மட்டுமல்ல பசு வதைச் சட்டம் கடுமையாக இந்த ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டது. பசு இறைச்சியை எடுத்துச் சென்றதாக பலரும் கொல்லப்பட்டனர். அவர்கள் சிறுபான்மை  மக்களே ஆவர். இதனால் மோடி ஆட்சி கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.  ஆனால் மோடியும் பா.ஜ.க.வினரும் இவற்றைப் பெரிதுபடுத்தவில்லை. அவர்கள்  தேசியவாதத்தையும் தேசப்பாதுகாப்பையும் முன்னிறுத்தி தீவிரவாதத்துக்கு எதிராகப்  பிரசாரம் செய்தனர். இந்தியாவின்  காவலன் என்று தம்மை அறிவித்து சமூக வலைத்தளங்களில் கூட தமது பெயர்களை  காவலர்கள் என அடைமொழியோடு மாற்றிக் கொண்டனர். 

அதுதான் அவர்களை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றுள்ளது போல. அன்றாட சாமானியர்களின்  பிரச்சினை களை விட பாகிஸ்தானுக்கு எதிரான கோஷம்இ தீவிரவாதத்துக்கு எதிரான செயற்பாடுகள்  இந்தியன், இந்து, தேசியவாதம், ஹிந்தி மொழிக்கான முன்னுரிமை என்பன வட இந்திய  மக்களை அதிகம் கவர்ந்துள்ளன என்றே தோன்றுகின்றது. தேர்தலுக்கு சில காலத்துக்கு முன்பு புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. அதில்  நூற்றுக்கணக்கான  இந்திய இராணுவத்தினர்  கொல்லப்பட்டனர். இது  பாகிஸ்தானிய தீவிரவாத தாக்குதல் என்று கூறப்பட்டதோடு பாகிஸ்தான்  எல்லையில்  தீவிரவாத முகாம்களை வான் வழியாக  இந்தியா தாக்கியது. இது இந்தியாவின் மிகப் பெரிய இராணுவ வெற்றியாகக் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானில் அத்துமீறி  தாக்குதல் நடத்திய அபினந்தன் என்ற விமானப்படை வீரர் பாகிஸ்தானிய இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார். 

இதன் போது மிகப் பெரிய போர் மூளுமோ என்ற அபாயம் இருந்த போதிலும்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  இது இந்தியாவின் தேர்தலுக்கான  அரசியல் நாடகம். நாங்கள் யுத்தம் செய்ய விரும்பவில்லை என விமர்சித்து அபினந்தனை விடுதலை செய்தார்.  ஆனால் இது இந்தியாவின் பிரதமர் மோடியின் வெற்றி யாக பா.ஜ.க.வினரால் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளையும் கொன்ற மாவீரராக மோடி பார்க்கப்பட்டார். ஆயினும் 

300கிராம் இறைச்சி கொண்டு போனாலே பசு காவலர்கள் கண்டுபிடித்து கொல்லும் இந்தியாவில் ஒரு தேசிய நெடுஞ்சாலையில்  கிலோக் கணக்கான  வெடி மருந்துடன்  சென்று தாக்குதல் நடத்தும் தீவிரவாதியைப்  பிடிக்க முடியாத அளவு  இந்தியாவின் பாதுகாப்பு பலவீனமானதா...-? 

இது திட்டமிட்ட தேர்தல் நாடகம் என எதிர்க் கட்சிகள் கடுமையாகத் தாக்கின. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு இது போன்ற பதிலடிகளை இந்தியா திருப்பி வழங்கவில்லை. மோடியாலேயே இது சாத்தியம் என்ற மனநிலை வடநாட்டு மக்களுக்கு வேரூன்றியுள்ளது. பாகிஸ்தானை எதிரியாகப் பார்க்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியே. இந்த மனநிலை இத் தேர்தலில்  எதிரொலித்துள்ளது. 

மேலும்  இந்தியாவில் மோடியின் ஆட்சியில் இந்து மதம் சார்ந்த தீவிரத் தன்மை அதிகரித்துள்ளதோடு பல மாநிலங்களின் முதல்வர்களாகவும் அரசி யல் தலைவர்களாகவும் சாமியார்களே உள்ளனர். மீண்டும் ராம இந்து ராஜ்ஜியம் மலர வேண்டும் என்பதே அவர்களது ஆசை. இந்து தத்துவவாதம் முன்னரிலும் பார்க்க  தற்போது இந்தியாவில் அதிகமாகவே  அதிகரித்துள்ளது. அதுதான் பசுவைக் கடவுளாக மதிக்கிறோம் என்று மாட்டிறைச்சி வைத்திருப்பவர்கள் அதிகம் கொல்லப்பட்ட சம்பவங்கள் இடம்பெறவும்  காரணமாகியுள்ளன. 

மோடி ஆட்சியில் தெருவில் வசிக்கும் மக்களை விட தெருவில் சுற்றிய பசுக்களுக்கே பாதுகாப்பு அதிகம். இதனை மக்களும் விரும்புகின்றனர்.  மதம் என்பது மிக பயங்கரமான ஆயுதம். மனிதனை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கக் கூடியது. இது தான் வட இந்தியாவில் அயோத்தியில் ராமர் கோயில் என்ற  பா.ஜ.க.வின் கோஷத்தை வலுவாக்கியுள்ளது. பெரும்பாலான இந்துக்களின் எதிர்பார்ப்பு இது. இலங்கையில் அண்மையில் மத அடிப்படை வாதத்தினால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் கூட ஒரு வகையில் மோடியின் செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளன என்றே கூற வேண்டும். 

ஏனெனில் நமது பூர்வீக மண்ணில் வேறு மதத்தின் பெயரால்  ஒரு தாக்குதல்  நடத்தப்படும் போது அதனைப் பார்த்து எம்மால் ரசிக்க முடியாது.இரத்தம்தான் கொதிக்கும். இலங்கையில் நடந்த மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல் கூட இந்தியாவிலும் இது போன்ற தாக்குதல் நடத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. அது போன்ற தாக்குதல்களைத் தடுக்க வேண்டுமெனில் ஓர் ஆளுமை மிக்க தலைமைத்துவத்தின் தேவைப்பாடு அவசியமானது. 

அது ராகுலுடன் ஒப்பிடும் போது மோடிக்கே அதிகம்.  இன்றும் ராகுலை சிறு பிள்ளை பப்பி என்றே பா.ஜ.க.வினர்  கிண்டல் செய்கின்றனர். "நான் அன்பாலேயே அனைவரையும் வெல்வேன். மோடியையும் வெல்வேன் . எனக்கு அனைவரும் ஒன்றே" என்று கட்டிப்பிடித்து அரவணைக்கும் ராகுலின் பேச்சை விட தேர்தல் காலத்தில் கூட இமய மலைக்கு காலாற பாத யாத்திரை செய்து காவி உடை தரித்து  குகைக்குள் இருந்து கொண்டு தியானம் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யும் மோடியே மக்களிடம் செல்வாக்குப் பெற்றுள்ளார். 

ராகுலை விட அதிகமாகவே சமூக வலைத்தளங்கள் மூலம்   இளைய சமுதாயத்தினரையும் மோடி கவர்ந்துள்ளார் என்றே கூற வேண்டும். அத்தோடு இத் தேர்தலில் மோடிக்கு எதிராக எதிர்க் கட்சிகளினால் வலிமையான ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியவில்லை. ராகுலைக் கூட தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மாத்திரமே  பிரதமர் வேட்பாளராக அறிவித்தார். ஏனைய மாநிலத் தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் எதிர்க் கட்சிகளினால் பிரதமர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி வாக்கு கேட்பதற்கான வியூகம் கூட ஒழுங்காக முன்னெடுக்கப்படவில்லை.  

எப்படியோ இந்தியா எதிர்பார்க்கும் ஓர் ஆளுமைமிக்க தலைவராக மோடி மட்டுமே இனம் காணப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அவர் ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் ஒரு நிகழ்வில் மாணவர் ஒருவர் "எப்படி பிரதமராகினீர்கள்-?"என்று மோடியிடம் வினவிய போது அதற்கு "2024 இல் நீங்களும் முயற்சிக்கலாம்" என்றார். அந்தளவு தான் தொடர்ந்து இருமுறை பிரமராக வருவேன் என்ற உறுதி அப்போதே மோடி மனதில் இருந்துள்ளது. அதுவே இன்று வென்றுள்ளது.  அவருக்கு நிகரான ஒரு தலைவரை இன்னும் எதிர்க் கட்சிகள் உருவாக்கவில்லை என்றே தோன்றுகின்றது. இதுவே இந்தத் தேர்தலில் மோடியின் அலை வீசி தொடர்ந்து ஜெயிக்கக் காரணம். 

எப்படி இருப்பினும் மோடியை எதிர்த்த அத்தனை தலைவர்களும் எப்படி இந்தத் தேர்தலில் தோற்றிருப்பர்? அதுவும் பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மேற்கு வங்கம் மம்தாஇ உ.பி.யில் அகிலேஷ் யாதவ் மாயாவதிஇ ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு என அனைவரும் எப்படி ஒன்றாக தோற்றிருப்பர் என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. 

இங்கு தான்  வாக்கு இயந்திர மோசடி உண்மையா பொய்யா மோசடியால் பெற்ற வெற்றி என்று எதிர்க் கட்சிகளின் விமர்சனங்கள் உண்மையா பொய்யா என்ற சந்தேகத்தை நமக்கும் ஏற்படுகின்றன. ஆயினும்  பா.ஜ.க.வை மீண்டும் அரியணையில் ஏற்றி இரண்டாவது முறையாக ராஜ்ஜியத்தை அதிகப் பெரும்பான்மையுடன் கைப்பற்றி மோடி சாதனை படைத்துள்ளார். ஆனால் கேரளாஇ தமிழகம் ஆகிய தென்னகத்தில் மோடியின் அலையால் உள் நுழைய முடியவில்லை.  

தென்னகத்தில் ராகுல் 

வட இந்தியாவில் பெற்ற வெற்றிக்கு மாறான பலனையே தென்னகம் பா.ஜ.க.விற்கு கொடுத்துள்ளது. இங்கு காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. காரணம் ராகுல் தான்.  காங்கிரஸின் கோட்டையான உத்தரபிரதேசம் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்திஇ ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அதேவேளைஇ கேரளாவின் வயநாட்டில் மாபெரும் வெற்றிபெற்று வரலாறு படைத்துவிட்டார். சுமார் நான்கு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

அங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வெற்றி  பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை யோடு ராகுல் முதன்முறையாக தென்னகத்  திலிருந்து பாராளுமன்றம் நுழைகின்றார். சபரி ஐயப்பன் கோயில் இங்கு  பா.ஜ.க.வினரின் ஆயுதமாக பார்க்கப்பட்ட போதிலும் அதனை மீறி ராகுல் வென்றுள் ளார். தென்னகத்தைப் பொறுத்தவரை மதவாதம் எப்போதும் பெரியளவில் ஜெயித்ததில்லை என்பதையே இந்த வெற்றி பறைசாற்றுகின்றது

( குமார். சுகுணா )