பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

பிரிஸ்டலில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான பயிற்சிப் போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 47.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 112 ஓட்டங்களையும், மலிக் 44 ஒட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் மொஹமட் நபி 3 விக்கெட்டுக்களையும், டூலட் ஸத்ரான், ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், அமிட் ஹுசேன், அத்தாப் ஆலம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

263 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 49.4 ஓவரில் 7 விக்கெட்டினை இழந்து பாகிஸ்தான் நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஹஷ்மத்துல்லா ஷஹதி 74 ஓட்டத்தையும், ஹஸ்ரதல்லாஹ் சாசாய் 49 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் வஹாப் ரியாஸ் 3 விக்கெட்டுக்களையும், இமாட் வசிம் 2 விக்கெட்டுக்களையும், சடெப் கான், மொஹமட் ஹஸ்னைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள பயிற்சிப் போட்டியொன்றில் பாகிஸ்தான் பங்களாதேஷையும், 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமோர் பயிற்சிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தையும் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

photo credit : ICC