தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 87 ஓட்டங்களினால் தோல்வியை சந்தித்துள்ளது.

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகக் கிண்ணத்துக்கான பயிற்சிப் போட்டிகள் நேற்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.

கார்டிப்பில் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை  அணிகளுக்கிடையேயான பயிற்சிப் போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 338 ஓட்டங்களை குவித்தனர்.

தென்னாபிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 88 ஓட்டங்களையும், ஹசிம் அம்லா 65 ஓட்டங்களையும், டாசன் 40 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் சுரங்க லக்மால், நுவான் பிரதிப் தலா 2 விக்கெட்டுக்களையும், இசுறு உதான, ஜீவன் மெண்டீஸ் மற்றும் தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

339 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 10 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. குசல் பெரேரா டக்கவுட் முறையிலும், லஹிரு திரிமான்ன 10 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

3 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் குசல் மெண்டீஸ் ஜோடி சேர்ந்தாட இலங்கை அணி முதல் 10 ஓவர்களின் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களை பெற்றது.

எனினும் 13.1 ஓவரில் குசல் மெண்டீஸ் 37 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (72-3). இவரின் ஆட்டமிழப்பையடுத்து களமிறங்கிய மெத்தியூஸ் திமுத் கருணாரத்னவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இலங்கை அணி 21 ஓவரின் நிறைவில் 106 ஓட்டங்களையும், 27 ஓவரின் நிறைவில் 155 ஓட்டங்களையும் பெற்றது.

இந் நிலையில் 29.3 ஆவது ஓவரில் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற (199-4), இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் தொடர்ச்சியாக சரியத் தொடங்கின.

அதன்படி தனஞ்சய டிசில்வா 5 ஓட்டத்துடனும், ஜீவன் மெண்டீஸ் 18 ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 64 ஓட்டத்துடனும், மிலிந்த சிறிவர்தன 5 ஓட்டத்துடனும், ஜெப்ரி வெண்ர்சி 3 ஓட்டத்துடனும் மற்றும் சுரங்க லக்மால் ஒரு ஓட்டத்துடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் இலங்கை அணி 42.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 87 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பில் பெலக்கொய்யோ 4 விக்கெட்டுக்களையும், லுங்கி நிகிடி 2 விக்கெட்டுக்களையும், ரபடா, இம்ரான் தாகீர், டூமினி மற்றும் டிவைன் ப்ரோட்டோரியஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மற்றுமோர் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

photo credit : ICC