ஜனாதிபதி, பிரதமரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் ; ஜனாதிபதியை அழைக்க முடியாதென்கின்றனர் ஸ்ரீல.சு.க.வினர்

Published By: Priyatharshan

25 May, 2019 | 07:10 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு  நடத்தும்  விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் இருவரையும் அழைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இதில் பிரதான சாட்சியாளர் என ஜே.வி.வி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை விடுத்தனர். எனினும் ஜனாதிபதியை விசாரணைக்கு அழைக்க முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சபையில் வாதிட்டனர். 

சபாநாயகர் அறிவிப்பின் போது கடந்த மாதம் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட விசேட தெரிவுக் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளதுடன் புதிதாக இந்த குழுவில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸவும் இணைந்துகொள்வதாக அறிவித்தார். 

இதனையடுத்து கருத்து முன்வைத்த சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல:- 

சபாநாயகர் அவர்கள், இந்த குழுவில் நடக்கும் நடவடிக்கைகள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே இதற்காக ஊடகங்களை அனுமதிக்க வேண்டும். இதில் மறைக்க எதுவும் இல்லை, உங்களுக்கு உள்ள அதிகாரத்தில் ஊடகங்களை அனுமதிக்க வேண்டும், ஊடகங்கள் தான் பொய்யான கருத்துக்களை பரப்புகின்றன. 

சபாநாயகர்:- உரிய குழுவின் தலைவருக்கு ஊடகங்களை அழைப்பு விடுக்க அதிகாரம் உள்ளது. அவர்கள் விரும்பினால் அழைக்கலாம் என்றார். இதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி தமது கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்தனர். 

அஜித் பெரேரா :- பாராளுமன்ற குழுக்களின் நகர்வுகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆகவே பாரளுமன்றத்தில் நடக்கும் முக்கிய விடயங்களை மக்களுக்கு அறிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஆசு மாரசிங்க :- தெரிவுக்குழு விடயங்களை ஊடகங்களின் வெளிப்படுத்த சில சட்டங்களை மாற்ற வேண்டும். சில சரத்துக்களின் சிக்கல்கள் உள்ளதால் அவற்றை மாற்றவேண்டும். இன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேர் மீதும் தவறான எண்ணக்கருத்து உள்ளது. ஆகவே  முதலில் ஊடகங்களை அனுமதிக்கும் சரத்துக்களை கொண்டுவந்து ஆரோக்கியமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சபாநாயகர்:- பாராளுமன்றத்தில் விசேட ஊடக அலகொன்று அடுத்த மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இந்த பிரச்சினைகள் இல்லாதுபோகும். 

வாசுதேவ நாணயகார :- எதனையும் மறைக்க இல்லையென்றால் ஏன் நம்பிக்கையில்லா பிரேரணையை எடுக்கவில்லை.

கிரியெல்ல :- நீங்களும் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாருங்கள். 

தயாசிறி ஜெயசேகர :- இந்த தெரிவுக்குழு நல்லதொரு  குழு, அதில் எமக்கு சிக்கல் இல்லை, ஆனால் அமைச்சர் ரிஷாத் குறித்து இதில் பேசி அவரை சுற்றவாளியாக மாற்றிவிட்டு இங்கு விவாதம் நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை. அனாவசிய பிரச்சினை ஒன்றினை உருவாக்க வேண்டாம். 

அனுரகுமார :- 21 ஆம் திகதி தாக்குதலில் அரசாங்கம் பொறுப்பில்லாது செயற்பட்டதற்காக அளவுக்கு அதிகமான சாட்சியங்கள் உள்ளன. பொலிஸ்மா அதிபர் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது, பாதுகாப்பு செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். 

ஆகவே இவர்கள் இருவரையும் தெரிவுக்குழுவிற்கு வரவழைத்து விசாரணை நடத்த வேண்டும். ஆகவே இந்த தெரிவுக்குழு இந்த விடயத்தில் அவசியமானது. ஆனால் அரசாங்கம் இதற்கு நடவடிக்கை எடுக்காது இதனை வைத்து அரசியல் செய்யவே முயற்சிக்கின்றது. 

அமைச்சர் ரிஷாத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முன்னரே தெரிவுக் குழு அமைக்கபட்டு விட்டது. 21 ஆம் திகதி தாக்குதல் உண்மைகளை கண்டறிவதை விடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. இதனை ஏற்றுகொள்ள முடியாது.

சபை முதல்வர்:- இந்த தெரிவுக் குழுவில் சில சரத்துகள் மாற்றப்பட்டுள்ளது, இதில் அமைச்சர் ஆளுநர்கள் மீதும் விவாதம் நடத்த முடியும்  என்ற ஒரு யோசனை இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே இதில் சாட்சியங்களை முன்வைக்க முடியும். எதிர்க்கட்சிகள் தமது சாட்சியங்களை முன்வையுங்கள். 

நிமல் லான்சா :- தெரிவுக்குழுவவில் நாம் கைச்சாத்திட்டது வேறு ஒரு விடயத்துக்காக, ஆனால் அரசாங்கம் பிரச்சினையை திசைதிருப்புகின்றது

தயாசிறி :- இந்த தெரிவுக் குழுவில் பிரதான ஐந்து காரணிகள்  உள்ளது. அதனையே நாம் கருத்தில்கொண்டு கைச்சாத்திட்டோம். ஆனால் அரசாங்கம் அதனை விடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கின்றது. 

அனுரகுமார :- தெரிவுக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள் வரவழைத்து விசாரணை நடத்தும் யோசனைக்கு நாம் எதிர்ப்பில்லை. நாம் இதனை ஆதரிக்கின்றோம். மந்திரிகள் எனும் போது பிரதமரும் இதில் உள்ளடங்கப்படுகின்றாரா?

சபாநாயகர் :- ஆம், 

அனுரகுமார :- அப்படியென்றால் பிரதமரை இந்த குழுவிற்கு விசாரணைக்கு கொண்டுவர வேண்டும். ஜனாதிபதியை இந்த குழுவிற்கு கொண்டுவர முடியுமா சபாநாயகர் அவர்களே ? ஏனென்றால் அவரும் சிங்கப்பூரில் இருந்துகொண்டு முன்வைத்த கருத்துக்களும் இங்கு வந்து முன்வைத்த கருத்துகள் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் உள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதிக்கு தகவல் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே இந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதியையும் வரவழைக்க வேண்டும். இது தெரிவுக் குழுவுக்கு உள்ள அதிகாரம். அதற்கமைய செயற்பட வேண்டும். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றால் முதலில் பாதுகாப்பு அமைச்சரிடம் உள்ள கடமை பொறுப்புகள் , முப்படை தலைவரிடம் உள்ள கடமை பொறுப்புக்கள், பிரதமரிடம் உள்ள கடமை பொறுப்புக்கள், ஏனைய அமைச்சர்கள், மந்திரிகள், ஆளுநர்கள் அனைவரின் கடமை பொறுப்புக்கள் குறித்து விசாரணை நடத்த அனைவரையும் தெரிவுக்குழுவுக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இதனை விடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனை காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. நாம் இந்த தெரிவுக் குழுவில் பங்குகொள்வோம். இதில் பிரதான காரணிகளுக்கு நாம் இணைந்து செயற்படுவோம். அதனை விடுத்து  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் அன்றில் இருந்து நாம் தெரிவுக் குழுவுக்கு வரமாட்டோம். 

சமிந்த விஜயசிறி :- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்ப்பை தெரிவிக்கின்றது. அமைச்சரவை தலைவர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு  அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பதவிநீக்க முடியும் தானே? ஏன் அதை செய்யவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தூய்மைப்படுத்தவே இவர்கள் இங்கு முயற்சி எடுக்கின்றனர். 

அனுர பிரியதர்ஷன யாப்பா :- பாராளுமன்ற சம்ரதாயங்களின் பிரகாரம் ஜனாதிபதியை நெருக்கடிக்கு தள்ளும் நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அதேபோல் இன்று அரசாங்கம் நிருவானமாக நின்றுகொண்டு ஏனையவர்களை குற்றம் சுமத்த  வேண்டாம். 

ஆசு மாரசிங்க :- குற்றம் குறித்து ஆராய  வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சர் விசாரணைக்கு வரவழைக்கப்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு, பாதுகாப்பு அமைச்சர் தான் பிரதான சாட்சியாக இதில் உள்ளது. அவர் ஜனாதிபதியா இல்லையா என்பதை அல்ல இதில் பிரச்சினை. பொறுப்பான எவராக இருந்தாலும் அவர் விசாரணைக்கு வரவழைக்கப்பட வேண்டும். யார் யார் பொறுப்போ அவர்கள் அனைவரையும் வரவழைக்க வேண்டும். யார் கரங்களில் குற்றம் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். 

ஹர்ஷன  ராஜகருணா :- இந்த விடயத்தில் அனைவருக்கும் முக்கிய பொறுப்புகள் உள்ளது. ஆனால் இந்த விசாரணைகளை நடத்த வேண்டியது பொலிசும் இராணுவமுமே. நாம் அல்ல. உண்மையில் பயங்கரவாதிகள் யார் என்பதை ஆளும் கட்சியாலோ, எதிர்க்கட்சியாலோ எவ்வாறு அடையாளம் காணமுடியும். இந்த அறிவு பாதுகாப்பு படைகளுக்கே உள்ளது. அவர்களுக்கு விசாரனைக்கு இடமளிக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை பொலிசார் கைதுசெய்ய முடியும். அவர்களுக்கு சுயாதீனமாக விசாரணை நடத்த முடியும். அதை விடுத்து நாம் இந்த விடயத்தை வைத்துக்கொண்டு நகைப்புக்குரிய விசயமாக மாற்ற வேண்டாம். 

தயாசிறி ஜெயசேகர :- அரசியல் அமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் சிறப்புரிமைகள் இன்னமும் அவ்வாறே உள்ளது. இந்த சபைக்கு ஜனாதிபதியை விசாரணைக்கு அழைக்க வேண்டும். அதனை உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உண்மையாக  இதனை விசாரிக்க நாம் தயார், அதை விடுத்து வேறு எந்த செயற்பாடுகளுக்கும் இடமளிக்க முடியாது. 

ஹர்ஷன ராஜகருணா :- ஜனாதிபதியை குழுக்கு அழைப்பதா இல்லையா என்பதை சபாநாயகர் நீங்கள் தீர்மானம் எடுங்கள். எமக்கு அதில் பிரச்சினை இல்லை.  நாம் கூறுவது இந்த சம்பவத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும்  பாதுகாப்பு அமைச்சரை  வரவழைத்து அமைச்சர் குறித்து ஆராய வேண்டும். அதற்காகவே நாம் கூறுகின்றோம். 

மரிக்கார் :- கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஒருவரை நியமித்தது பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் ஒருவராகவே. இந்த சம்பவம் இடம்பெறும் போது சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி என்றால், இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு செயலாளர் அமைச்சருக்கு தெரிவித்தார என்ற காரணியை அறிந்துகொள்ள அவரை தெரிவுக்குழுவுக்கு வரவழைத்து விசாரணை செய்ய முடியாது என்றால் இந்த தெரிவுக்குழு அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

அனுரகுமார :- தெரிவுக்குழு விடயங்களை பார்த்தல் அவர் அமைச்சரா, ஜனாதிபதியா, பொலிஸ்மா அதிபரா என்பதெல்லாம் அரசாங்க தரப்பு. இந்த விசாரணையில் அரசாங்கத்தின் மீதே விசாரணை நடக்கின்றது. அவ்வாறு இருக்கையில்  விசாரணை அரச தரப்பின் மீது நடக்கும்போது அந்த விசாரணையை நடத்தும் தெரிவுக்குழுவில் அரசாங்க தரப்பு அதிகமாக உள்ளது. இது நியாயமில்லை. ஆகவே ஒன்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக இடம் அல்லது சம எண்ணிக்கையில் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்