(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களைத் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழு  நியமிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு , பொது எதிரணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளாமை குறித்து எதிரக்கட்சியின் பிரதம கொரடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர சபாநாயகர் கருஜய சூரியவுக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார். 

குறித்த  கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவுக்கும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களால் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. 

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றமற்றவர் எனக் காண்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்பதோடு, அதற்கிணங்கவே அவர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதே நாட்டின் பெரும்பான்மை மக்களதும், சுதந்திர கூட்டமைப்பினதும் நிலைப்பாடாகும். 

அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 60 பேரை விட அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.  இவ்வாறு நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள உறுப்பினர்களும், அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் தெரிவுக் குழுவில் பங்கேற்றிருந்தால் பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர்கள் முன்வைக்க எதிர்பார்த்துள்ள காரணங்களை குறிப்பிடுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும்.