மன்னன் சங்கிலியனின் 400 ஆவது நினைவு நாளான எதிர்வரும் திங்கட்கிழமை (26) இலங்கையில் பல இடங்களில் மன்னன் சங்கிலியன் நினைவுக் குழு சார்பாக நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த க.சச்சிதானந்தம் அழைப்பு விடுத்துள்ளார்.

“1619 இல் சங்கிலியன் வீழ்ந்தது இன்றைய 2019 ஆம் ஆண்டு 400 ஆவது ஆண்டு. நினைவுநாள் ஆகும். எதிர்வரும் திங்கள்கிழமை நினைவுகொள்ளும் நாள். இந்த நாளில் காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் யமுனை ஏரியில் -யமுனை ஆற்று நீர்- காவிரி ஆற்று நீர் கலத்தல் நிகழ்வு ஆரம்பமாகும்.

இதனைத் தொடர்ந்து இலங்கையில் உள்ள 13 இடங்களான கிளிநொச்சியில் சிவகங்கையிலும் கந்தன் குளத்திலும் – முல்லைத்தீவில் நந்திக்கடலிலும் – வவுனியாவில் கற்குளத்திலும் – மன்னாரில் பாலாவியிலும் – அநுராதபுரத்தில் தேவநம்பியதீச வாவியிலும் – திருகோணமலையில் கன்னியா வெந்நீரூற்றிலும் – நுவரெலியாவில் அடிவார அருவி சிவனொளிபாத மலையிலும் – கற்றன் துர்க்கை அம்மன் ஆலயத்திலும் – அம்பாந்தோட்டையில் கதிரமலைக் கந்தன் சிவன்கோயிலிலும்- அம்பாறையில் அருள்மிகு சித்திரவேலாயுதர் கோயில் கடலிலும் – பதுளையில் அருள்மிகு சித்திவிநாயகர் கோயில் ஆற்றிலும் – புத்தளத்தில் உடப்பு ஆண்டிமுனை மாரியம்மன் ஆலயத்திலும் உள்ள நீர் நிலைகளில் நீர் கலத்தல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கின்றேன் என்றார்.