அமெ­ரிக்­காவின் பெருஞ்­செ­ல­வி­லான போர்­க­ளுக்கு எதி­ராக ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் திரும்­பத்­தி­ரும்ப பேசி­வந்­தி­ருக்­கிறார். உதா­ர­ண­மாக, 2003 ஈராக் போர் அமெ­ரிக்கா எக்­கா­லத்­தி­லுமே செய்­தி­ராத மிக மோச­மான தவறு என்று கடந்த வருடம் அவர் வர்­ணித்தார். அமெ­ரிக்கத் துருப்­புக்­களை நாட்­டுக்கு திருப்­பி­ய­ழைப்­ப­தாக ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­க­ளின்­போது அவர் உறு­தி­ய­ளித்தார். ஆனால், அவர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்று இரண்­டரை வருட காலத்­துக்குள்­ளாக மேற்­கா­சி­யாவில் இன்­னொரு பெரிய போரின் விளிம்பில் (இத்­த­டவை ஈரா­னுக்கு எதி­ராக) அமெ­ரிக்கா நிற்­கி­றது.

 

 பிராந்­தி­யத்தில் உள்ள தனது நலன்கள் மீதும் நேச நாடு­களின் நலன்கள் மீதும் ஈரான் தாக்­குதல் நடத்­தக்­கூடும் என்று புல­னாய்வுத் தக­வல்கள் கிடைத்­தி­ருப்­ப­தாகக் கூறிக்­கொண்டு அமெ­ரிக்கா ஏற்­கெ­னவே  வளை­கு­டா­வுக்கு விமானம் தாங்­கிக்­கப்பல் அணி­யொன்­றையும் குண்­டு­வீச்சு விமானத் தொகு­தி­யொன்­றையும் அனுப்­பி­வைத்­தி­ருக்­கி­றது. இதை ஈரா­னிய ஆட்­சிக்கு அனுப்­பப்­பட்ட தெட்­டத்­தெ­ளி­வான செய்தி என்று அமெ­ரிக்க தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஜோன் பொல்டன் வர்­ணித்­தி­ருந்தார். "ஈரா­னுடன் அமெ­ரிக்கா போருக்குப் போகுமா என்று கேட்­கப்­பட்­ட­போது இல்லை என்று நம்­பு­கிறேன் " என்று ஜனா­தி­பதி ட்ரம்ப் பதி­ல­ளித்தார். ஆனால், வாஷிங்­ட­னிலும் மேற்­கா­சி­யா­விலும் போருக்­கான ஆர­வாரம் அதி­க­ரிப்­பதை தெளி­வாக அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அமெ­ரிக்­காவின் ஈரான் கொள்­கையை தற்­போது வழி­ந­டத்­து­கின்ற பொல்டன் ஈரான் விவ­கா­ரங்­களில் கடும்­போக்கைக் கடைப்­பி­டிப்­பதில் பிர­ப­ல­மா­னவர். தெஹ்­ரானில் ஆட்­சி­மாற்றம் ஏற்­ப­ட­வேண்டும் என்று அவர்  திரும்பத் திரும்ப கூறி­வந்­தி­ருக்­கிறார். 

 தற்­போ­தைய கொந்­த­ளிப்பு நிலைக்கு வழி­வ­குத்த புல­னாய்வுத் தக­வல்­களை இஸ்ரேல் நாடு தான் வழங்­கி­யது. சவூதி அரே­பி­யாவின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்மத் பின் சல்­மானின் சகோ­த­ர­ரான துர்கி பின் சல்­மா­னுக்கு சொந்­த­மான பத்­தி­ரி­கை­யொன்று ஈரான் மீது  "துல்­லியத் தாக்­குதல்" (Surgical Strikes) நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று  கடந்த வாரம் ஆசி­ரிய தலை­யங்கம் தீட்­டி­யி­ருந்­தது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்தின் கரை­யோ­ர­மாக நான்கு எண்­ணெய்க்­கப்­பல்கள் மீதான  மர்­மத்­துக்­கி­ட­மான தாக்­கு­தலும் சவூ­தியின் எண்­ணெய்க்­குழாய் ஒன்றின் மீது நடத்­தப்­பட்ட  ட்ரோன் தாக்­கு­தலும் (இத்­தாக்­கு­த­லுக்கு தாங்­களே பொறுப்பு என்று யேமனில் உள்ள ஈரா­னிய ஆத­ர­வு­ட­னான ஹௌதி கிளர்ச்­சி­யா­ளர்கள் உரி­மை­கோ­ரினர்) நெருக்­க­டியை மேலும் மோச­மாக்­கி­யது. வெறு­மனே ஒரு சிறு பொறி கூட முழு அள­வி­லான மோத­லொன்றை மூள­வைத்­து­வி­டக்­கூ­டிய அள­வுக்கு வளை­கு­டாவில் நிலை­வரம் ஆபத்­தா­ன­தாக இருக்­கி­றது.  

நெறி­மு­றைத்­த­வறு 

 அமெ­ரிக்கா கடந்த காலத்தில் செய்த தலை­யீ­டு­களில் இருந்து மீண்­டு­வ­ரு­வ­தற்கு இன்­னமும் கூட கஷ்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்ற ஒரு பிராந்­தி­யத்தில் இன்­னொரு போருக்குச் செல்­லு­மே­யானால், அது நெறி­முறை ரீதியில் பெருந்­தீங்கைக் கொண்­டு­வ­ரக்­கூ­டி­ய­தா­கவும் மூலோ­பாய நோக்கில் கேலிக்­கி­ட­மா­ன­தா­கவும் அமையும். முத­லா­வ­தாக, ஈரானை அமெ­ரிக்கா இவ்­வா­றாக நடத்­த­வேண்­டி­ய­தில்லை.தடை­வி­திப்­பு­களில் இருந்து நிவா­ரணம் பெறு­வ­தற்கு கைமா­றாக ஈரான் அதன் அணுத்­திட்­டங்­களை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு 2015ஆம் ஆண்டில் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டது. அந்த உடன்­ப­டிக்­கையை முறை­யாக கடைப்­பி­டித்தும் வந்­தது. அமெ­ரிக்கா மீண்டும் விதித்த தடை­க­ளுக்கு ஆட்­சேபம் தெரி­வித்து இந்த மாதம் தான் அந்த சர்­வ­தேச உடன்­ப­டிக்­கையின் கடப்­பா­டுகள் சில­வற்றை இடை­நி­றுத்­து­வ­தாக ஈரான் அறி­வித்­தது என்­பது கவ­னிக்­கத்­தக்­கது. உடன்­ப­டிக்­கையில் இருந்து கடந்த வருடம் வெளி­யே­றி­ய­துடன் ஈரான் மீது மீண்டும் தடை­களை விதித்­ததன் மூல­மாக உடன்­ப­டிக்­கையை முதலில் ஜனா­தி­பதி ட்ரம்ப் தான் மீறினார். உடன்­ப­டிக்­கையை முறை­யாகக் கடைப்­பி­டித்த ஈரானின் செயல் அமை­தி­யான உல­கொன்­றிலே மதித்­துப்­பா­ராட்­டப்­பட்­டி­ருக்கும். அத்­துடன் உடன்­ப­டிக்­கையின் விளை­வாகக் கிடைக்­கக்­கூ­டி­யவை என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட பயன்­களை அறு­வ­டை­செய்­யவும் அந்த நாடு அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்கும். ஆனால், அதற்கு பதி­லாக ட்ரம்ப் நிரு­வா­கமோ ஈரானைத் தண்­டித்­த­தையே உலகம் கண்­டது.

 இரண்­டா­வ­தாக, அமெ­ரிக்கா போருக்கு போகு­மேயானால், அது ஒரு­த­லைப்­பட்­ச­மான நட­வ­டிக்­கை­யா­கவே இருக்கும். இரா­ணுவ நட­வ­டிக்­கையை ரஷ்­யாவும் சீனாவும் தொடர்ந்து உறு­தி­யாக எதிர்த்­து­வ­ரு­வதால், ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபையில் அதற்கு அங்­கீ­காரம் கிடைக்­கப்­போ­வ­தில்லை. ஈராக் போரை ஆத­ரித்த ஐக்­கிய இராச்­சியம் உட்­பட அமெ­ரிக்­காவின் ஐரோப்­பிய நேச நாடு­களும் கூட ஈரான் அணு உடன்­ப­டிக்கை மீது தொடர்ந்தும் பற்­று­தியைக் கொண்­டுள்­ளன. ஈரா­னுக்கு எதி­ரான இரா­ணுவ நட­வ­டிக்­கைக்கு  சவூதி அரே­பி­யா­வி­னதும்  இஸ்­ரே­லி­னதும் ஆத­ரவை அமெ­ரிக்கா பெறக்­கூடும், ஆனால் முழு அள­வி­லான போரொன்­றுக்குள் தாங்கள் இழுக்­கப்­ப­டுவதை  அவ்­விரு நாடு­களும் கூட விரும்­புமா என்­பது நிச்­ச­ய­மில்லை. ஒரு­த­லைப்­பட்­ச­மான இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்று சர்­வ­தேச நிறு­வ­னங்­களை மேலும் பல­வீ­னப்­ப­டுத்தி  அத்­தி­லாந்திக் கூட்­ட­ணிக்குள் (நேட்டோ) மேலும் விரி­சல்­களை தோற்­று­விக்கும்.

 மூன்­றா­வ­தாக, ஈரான் ஒரு ஈராக் அல்ல. அது ஒரு லிபி­யாவும் அல்ல. ஒரு தசாப்த கால­மாக கடு­மை­யான தடை­களை விதித்து ஈராக்கின் இரா­ணு­வத்­தையும் பொரு­ளா­தா­ரத்­தையும் முட­மாக்­கிய பின்­னரே அமெ­ரிக்கா அந்த நாட்­டுக்குள் படை­யெ­டுத்­தது.ஈராக் முற்­று­மு­ழு­தாக தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. முத­லா­வது வளை­குடா போருக்குப் பிறகு அரபு நாடுகள் பாக்­தா­திற்கு எதி­ராக திரும்­பி­யி­ருந்­தன.ஈரான் அதன் எதிரி ரஷ்­யாவும் சண்­டைக்குள் செல்­லாமல் ஒதுங்கும் மனோ­நி­லை­யி­லேயே இருந்­தன. அமெ­ரிக்­காவும் ஐக்­கிய இராச்­சி­யமும் அவற்றின் நேச நாடு­களும் ஈராக்­கிற்கு அணி­வ­குத்­துச்­சென்று ஒரு சில வாரங்­க­ளுக்குள் சதாம் ஹுசெய்ன் ஆட்­சியைத் தூக்­கி­யெ­றிந்­தன.

  மறு­பு­றத்தில், ஈரான் நிரந்­த­ர­மாக பாது­காப்பு உணர்ச்­சி­யற்ற ஒரு நிலையில் வாழ்­கின்ற ஒரு நாடாகும். எப்­போ­துமே போர் தயார் நிலை­யி­லேயே இருந்­து­ வந்­தி­ருக்­கி­றது. ஈரா­னிடம் பலம்­பொ­ருந்­திய பாரம்­ப­ரிய இரா­ணுவம் ஒன்று இல்லை என்­ப­துடன் தடை­வி­திப்­பு­க­ளினால் நாடு முடங்­கிப்­போ­யி­ருக்கும் அதே­வேளை தங்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய சவால்­களை ஈரானின் கொள்கை வகுப்­பா­ளர்கள் நன்­க­றி­வார்கள். அதன் கார­ணத்­தி­னால்தான் அவர்கள் திரட்டல் படை­களின் ஊடாக (Non - state militia groups) மேற்­கா­சியா பூராவும் ஈரா­னிய செல்­வாக்கை விஸ்­த­ரிக்கும் முன்­ன­ரங்க பாது­காப்பு கோட்­பா­டொன்றைக் (Forward Defence Doctrine ) கடைப்­பி­டிக்­கி­றார்கள். ஈரா­னுக்கு லெப­னானில் ஹிஸ்­புல்லா இயக்­கத்­த­வர்கள் இருக்­கி­றார்கள். ஈராக்­கிலும் சிரி­யா­விலும் ஷியா முஸ்லிம் திரட்டல் படை­களும் யேமனில் ஹௌதி கிளர்ச்­சி­யா­ளர்­களும் காசாவில் இஸ்­லா­மிய ஜிஹாத்தும் இருக்­கின்­றன. போரொன்று மூளும் பட்­சத்தில் இந்த குழுக்­களை செயலில் இறக்­கு­வதன் மூலம் பல்­முனை மோதல்­களை மூள­வைத்து ஏனைய பல நாடு­களை போருக்குள் இழுத்­து­விட ஈரானால் முடியும். இத்­த­கை­ய­தொரு சாத்­தி­யப்­பாடு ஈரான் மீதான "மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட தாக்­கு­தலைக் கூட" (A limited strike) ஆபத்­து­மி­குந்­த­தாக்­கி­விடும்.

 இது தவிர, ஹோர்முஸ் நீரி­ணையில் கப்பல் போக்­கு­வ­ரத்தை  ஈரானால் தடுக்­க­மு­டியும்.பார­சீக வளை­கு­டா­வுக்கும் ஓமான் வளை­கு­டா­வுக்கும் இடையில் இருக்கும் ஹோர்முஸ் நீரி­ணையின் ஊடா­கவே உலகின் திரவ இயற்­கை­வா­யுவின் மூன்றில் ஒரு பகு­தியும் மொத்த எண்ணெய் உற்­பத்­தியில் 20 சத­வீதமும் கொண்­டு­செல்­லப்­ப­டு­கின்­றன. அவ்­வாறு அந்த நீரி­ணையை  தடுக்கும் கடு­மை­வாய்ந்த நட­வ­டிக்­கையில் ஈரான் இறங்­கு­மானால், அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து வரக்­கூ­டிய பதி­ல­டியும் மிகப்­பா­ரி­ய­தாக இருக்­கக்­கூடும். எவ்­வா­றென்­றாலும் போர் என்­பது கடு­மை­வாய்ந்த ஒரு நட­வ­டிக்­கையே. அது தீவி­ர­மான பதி­ல­டி­யைத்­தூண்­டி­வி­டக்­கூடும்.

 நான்­கா­வ­தாக, அமெ­ரிக்­காவின் கடந்த காலப் போர் வர­லாறு அடிக்­கடி கூறப்­ப­டு­வதைப் போன்று ஒன்றும் பிர­மா­த­மா­ன­தல்ல. அமெ­ரிக்கா உலகின் ஒப்­பு­யர்­வற்ற இரா­ணுவ வல்­ல­ர­சாக (pre eminent military power) இருக்­கி­ற­தென்றால் அதற்கு அது ஈடு­பட்ட  போர்­களின் விளை­வுகள் அல்ல, அதன் இரா­ணுவ வல்­ல­மையே கார­ண­மாகும். ஆப்­கா­னிஸ்­தானில் இருந்து மரி­யா­தையைக் காப்­பாற்­றிக்­கொண்டு வெளி­யே­று­வ­தற்கு வழியைக் காண்­ப­தற்­காக தலி­பான்­க­ளுடன் அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்­தையை நடத்­திக்­கொண்­டி­ருக்­கின்ற ஒரு நேரத்தில் அது வளை­கு­டாவில் பதற்­ற­நி­லையைத் தீவி­ரப்­ப­டுத்­து­வது விசித்­தி­ர­மா­ன­தாகும்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரான போர் தொடங்­கி­ய­போது உலகில் உள்ள ஒவ்­வொரு பயங்­க­ர­வா­திக்குப் பின்­னாலும் தொடர்ந்­து­ சென்று அழிக்­கப்­போ­வ­தாக அமெ­ரிக்கா சூளு­ரைத்­தது. 17 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இன்று அல் - கைதா இன்னும் உயிரோடு இருக்­கி­றது. இஸ்­லா­மிய அரசும் (ஐ.எஸ்.) வேறு பயங்­க­ர­வாத இயக்­கங்­களும் உலகம் பூராவும் செயற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. தலி­பான்கள் ஆப்­கா­னிஸ்­தானின் அரை­வா­சிக்கும் அதி­க­மான பிராந்­தி­யத்தை தங்கள் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கி­றார்கள்.

 ஈராக்கில் சதாம் ஹுசெய்னின் ஆட்­சியை சுல­ப­மாக வீழ்த்த அமெ­ரிக்­கா­வினால் இய­லு­மாக இருந்­தது, ஆனால் சதா­முக்கு பின்­ன­ரான அமை­தி­யின்­மையை அடக்க அது தவ­றி­விட்­டது. மதப்­பி­ரி­வு­க­ளுக்­கி­டை­யி­லான உள்­நாட்­டுப்­போ­ருக்குள் அந்த  நாடு மூழ்­கி­யது. ஈராக்கின் குழப்­ப­நி­லையில் இருந்­துதான் இஸ்­லா­மிய அரசு இயக்கம் தோன்­றி­யது.

 லிபி­யாவில் வட ­அத்­தி­லாந்திக் ஒப்­பந்த நாடுகள் கூட்­டணி  (குறிப்­பாக அமெ­ரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஐக்­கிய இராச்­சியம்) 2011 ஆம் ஆண்டில் தலை­யிட்­ட­போது கேணல் மும்மர் கடா­பியின் சர்­வா­தி­கா­ரத்தில் இருந்து அந்த நாட்டை விடு­விப்­பதே நோக்கம் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. கடாபி கொல்­லப்­பட்டார்.ஆனால் நாடு குழப்­பத்தில் ஆழ்ந்­தது. இன்­னமும் அதி­லி­ருந்து மீண்­டு­வர முடி­ய­வில்லை.

சிரி­யாவில் அமெ­ரிக்கா மறை­மு­க­மான தலை­யீ­டொன்றைச் செய்து ஜனா­தி­பதி பஷார் அல் - அசாத் பத­வி­ க­விழ்க்­கப்­ப­ட­வேண்டும் என்று கோரி­யது.ஆனால், ரஷ்­யர்கள் இரா­ணுவ தலை­யீட்டைச் செய்­யத்­தொ­டங்­கி­யதும் அமெ­ரிக்­கா­வினால் சிரி­யாவில் பெரி­தாக ஒன்­றையும் செய்­ய­மு­டி­யாமல் போய்­விட்­டது. இந்த நாடு­களில் எல்லாம் அமெ­ரிக்­கா­வினால் தனது நோக்­கங்­களை நிறை­வேற்­றிக்­கொள்­ள­மு­டி­ய­வில்லை. விரும்­பிய விளை­வு­களைப் பெற அமெ­ரிக்கா தவ­றி­யது. ஈரான் மாத்­திரம் எவ்வாறு வேறுபட்டதாக இருக்கும்?

 இராஜதந்திரத்தை  பயன்படுத்துதல்

ஈரா­னி­ட­மி­ருந்து வரக்­கூ­டிய சவால்­க­ளை­யெல்லாம் முன்னாள் அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா நன்கு விளங்­கிக்­கொண்டார் போலும். அதன் கார­ணத்­தி­னால்தான் இரா­ஜ­தந்­திர வழி­வ­கை­களின் மூல­மாக ஈரானின் அணுத்­திட்­டத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அவர் முயற்­சித்தார். ட்ரம்ப் வெள்­ளை­மா­ளி­கைக்கு வந்து சீர்­கு­லைக்கும் வரை அதில் ஒபாமா. வெற்­றி­யும் ­கண்டார். ஈரா­னி­யர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்த விரும்­பு­வ­தாக ட்ரம்ப் கூறு­கிறார், ஆனால் அதைச் செய்­வ­தற்­கான யதார்த்­த­பூர்­வ­மான திட்டம் எதுவும் அவ­ரிடம் கிடை­யாது. பேச்­சு­வார்த்­தையே அவ­ரது பிர­தான நோக்­க­மாக இருந்­தி­ருந்தால் அணு உடன்­ப­டிக்­கையில் இருந்து அமெ­ரிக்கா வெளி­யே­றி­யி­ருக்­கக்­கூ­டாது.  உடன்­ப­டிக்­கை­யினால் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருந்த  சுமு­க­மான சூழ்­நி­லையை உற­வு­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கும் பிராந்­தி­யத்தில் ஈரானின் முனைப்­பான  நட­வ­டிக்­கை­க­ளினால் வாஷிங்­ட­னுக்கு ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய அக்­க­றை­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கும் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். நிகழ்­வுப்­போக்­கு­களை மாற்­று­வ­தற்கு உண்­மை­யா­கவே அமெ­ரிக்க ஜனா­தி­பதி விரும்­பு­கிறார் என்றால், பதற்ற நிலையைத் தணிப்பதற்கு நடவடிக்கைகளை அவர் தொடங்கவேண்டும்.அத்துடன் போர் நாட்டமுள்ள தனது ஆலோசகர்களை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும்.                                     

   (இந்து)