இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அனைவருக்கும் தனித்தனியே தனது நன்றிகளையும் பதில்களையும் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த இந்தியாவின் 17 ஆவது பாராளுமன்ற தேர்தலில் முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆட்சியமைக்க தேவையான எண்ணிக்கையை தாண்டி, பா.ஜ.க. மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரும் மற்றும் அயல் நாட்டு அரசியல் தலைவர்கள் சிலரும் குறிப்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது டுவிட்டா் பக்கத்தில் தனித்தனியே நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.