(எம்.எப்.எம்.பஸீர்)

வடமேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சமாந்திரமாக மினுவாங்கொடை நகரில் வர்த்தக நிலையங்களை மையப்படுத்தியும் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில்,  பிவித்துரு ஹெலஉருமய கட்சியின் உப தலைவரும் பிரபல பாடகருமான மதுமாதவ அரவிந்தவையும் அவருடன் இருந்த பிரபல வர்த்தகர்களையும் கைதுசெய்ய மினுவாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மினுவனக்கொடை நகரில்  வன்முறைகள் பதிவான சந்தர்ப்பத்தில் இம் மூவரும் அங்கு இருந்துள்ளதாகவும் அவர்கள் நகரில் சுற்றி வந்த ஜீப் வண்டி, பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கடவத்தை  பகுதியில் வைத்து இந்த ஜீப் வண்டி வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைத்திருந்த போது மீட்கப்பட்டுள்ளது.  மதுமாதவ அரவிந்தவுடன் சேர்த்து தேடப்படும் ஏனைய இரு வர்த்தகர்களில் ஒருவர் ராகமையைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் கடவத்தையை சேர்ந்தவர் எனவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த வன்முறைகளை வழி நடத்தியவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் 78 பேரை கைதுசெய்துள்ளதுடன் ஏனையவர்கள் பாகுபாடின்றி கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுட்டிக்காட்டினார்.