இந்திய பாராளுமன்ற தேர்தலில் அபரிமிதமான வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான்கான் முன்னர் பிரதமர் மோடியை பற்றி தெரிவித்த ஒரு கருத்தில் சில பெரிய பதவிகளில் சிறியமனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். 

நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் புதிதாக அமையும் ஆட்சியில் பாகிஸ்தான் - இந்தியா இடையிலான அமைதி பேச்சுக்கு நல்ல வாய்ப்பு அமையும் என்று கடந்த மாதம் இம்ரான் கான் தெரிவித்தார். 

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் சுமார் 350 தொகுதிகளில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடியை நான் வாழ்த்துகிறேன், அமைதியும் முன்னேற்றமும் வளங்களும் நிறைந்த தெற்காசியாவை உருவாக்க அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.