எதிர் வரும் 26 ஆம் திகதியன்று இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளதாக டில்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த 17வது மக்களவை தேர்தலில் முன்னணி நிலவரங்கள் மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 272க்கும் மேலாக முன்னிலை பெற்றிருக்கிறது. கடந்த முறை பா.ஜ.க வென்ற தொகுதிகளைக் காட்டிலும் இம்முறை அதிக தொகுதியில் பா ஜ க தனிப்பட்ட முறையில் வெற்றிப் பெற்றிருப்பதால், மோடி மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இன்று மாலை பா.ஜ.கவின் ஆட்சி மன்ற குழு கூடுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமையை பா.ஜ.க கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து மே 26 ஆம் தேதி அன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்க இருப்பதாக டில்லி பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 புது டில்லியில் நடைபெற உள்ள இந்த பதவியேற்பு விழாவில் பா.ஜ.கவின் தலைவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.