(ஆர்.விதுஷா)

வேலையில்லா பட்டதாரிகளுக்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உடனடியாக நியமனங்களை  வழங்குமாறு  கோரி  கொழும்பு  கோட்டை  புகையிரத  நிலையத்திற்கு  முன்பாக  இன்று வியாழக்கிழமை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தினர். 

இருபதாயிரம்  பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவையில்  எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முரணாக திட்ட உத்தியோகத்தர் பதவிகளுக்கு அநியமனங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம்  மேற்கொண்டிருக்கின்றது. அந்த நியமனங்களை  பெரும்பாலும்  அரசாங்க  கட்சி  சார்ந்தவர்களுக்கே வழங்கவுள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்த ஒன்றிணைந்த  வேலையற்ற  பட்டதாரிகள்  சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் தன்னே குணானந்த தேரர் ஆர்ப்பாட்டகாரர்கள் மத்தியில்  ஊடகங்களுக்கு  கூறியதாவது  ,  

அபிவிருத்தி அதிகாரிகளுக்கான போட்டிப்பரீட்சைக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து  விட்டது.  இந்த போட்டிப்பரீட்சைக்கு 57000 வரையான வேலையில்லாப் பட்டதாரிகள் தோற்றியுள்ளதுடன், இவர்கள் இரண்டு  நேர்முகத்தேர்வுகளுக்கும் சமூகமளித்திருந்தனர்.  

அந்த தேர்வுகள் மாவட்ட செயலகத்தின்  ஊடாகவும்  , பிரதேச  செயலகம் ஊடாகவும்  இடம்  பெற்றுள்ளதுடன்,அதற்காக  பாரிய அளவு நிதியும் செலவிடப்பட்டுள்ளது.  அதற்காக  நேரமும்  செலவிடப்பட்டுள்ளது. இந்த  தேர்வுகளில்  தோற்றிய  3500 பேருக்கு மாத்திரமே வேலைவாய்ப்பு பெற்றுக்ககொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏனைய வேலையில்லா  பட்டதாரிகளுக்கு வேலையை பெற்றுக்கொடுகப்பதில் அரசாங்கம் முறைகேடாக நடக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.   

வேலையில்லா  பட்டதாரிகள் 20000 பேருக்கு  அபிவிருத்தி  உத்தியோகஸ்தர் நியமனம் அளிப்பது  தொடர்பில்  அமைச்சரவையில தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுகின்றமை புலப்படுகின்றது.  

அபிவிருத்தி அதிகாரிகளுக்காகன நியமனம் தொடர்பில் அமைச்சரவையில்  தீர்மானங்களை மேற்கொண்டு  விட்டு  அந்த  பதவிகளுக்காக நியமனங்களை வழங்கும் போது திட்டமிடல் உத்தியோகத்தர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆகவே, இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி வேலையில்லா பட்டதாரிகளுக்கு  உடனடியாக   நியமனங்களை வழங்ககோரி பிரதமர்  அலுவலகத்தில் கோரிக்கை உள்ளடங்கிய மகஜரொன்றையும்  சமர்ப்பிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.