பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசர கால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலை கழக மாணவர் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டி சாலை உரிமையாளர் ஆகியோரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க கோரி யாழ்.பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைகழகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து கடந்த 03ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது மாணவர் ஒன்றிய அறையினுள் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் படங்கள் உட்பட சில படங்கள் மீட்கப்பட்டன. இதேவேளை மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் தியாக தீபம் திலீபனின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது. 

இவற்றையடுத்து மாணவர் ஒன்றிய தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனர் ஆகியோர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூவரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தனர். 

பின்னர் கடந்த 16ஆம் திகதி மூவரும் தலா ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் மாணவர்கள் மூவருக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து மூவரையும் வழக்கில் இருந்து முற்றாக விடுவிக்க வேண்டும் என கோரி வருகின்றனர். 

குறித்த கோரிக்கையை முன்வைத்து நேற்று புதன்கிழமை மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து மாணவ பிரதிநிதிகளை சந்தித்த தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் கதிர்காமநாதன் கந்தசாமி, உயர்மட்டத் தரப்புக்களை நேரடியாக சந்தித்து மூவரது விடுதலையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.

அவரது உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மாணவர் ஒன்றியத்தினர், நாளை வெள்ளிக்கிழமை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க ஒத்துழைப்பதாக இணக்கம் தெரிவித்தனர்.

இந்நிலையிலையே மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.