உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது என்று மீண்டும் இந்திய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது,

“வாழ்த்துக்கள் மோடி ஜி. இந்தியாவை சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்னேற்ற நீங்கள் முன்னெடுத்துள்ள ஆலோசனைகள் தேசம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உங்கள் மீது இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளது என்பதை அமோகமான இந்த முடிவுகள் எடுத்துரைக்கின்றன.

மேக் இன் இந்தியா, தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த ஸ்டார்ட் அப் இந்தியா, பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு ஸ்டாண்ட் அப் இந்தியா, இது புதுமை, சுய நம்பிக்கை மற்றும் சமவாய்ப்பிற்கு வழிவகுக்கும். விரைவில் இது சாத்தியமாக நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து நிற்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இவர் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. =பா.ஜ.க. கூட்டணியின் வெற்றிக்காக பிரசாரம் செய்தார் என்பதும், வாக்கு எண்ணிக்கை முன்னர் அமித்ஷா கூட்டிய அனைத்துக் கட்சிகளுக்கான விருந்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.