பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து கைவிடப்பட்டது காணி சுவீகரிப்பு

By Priyatharshan

27 Apr, 2016 | 10:53 AM
image

( ஆர். ராம் )

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காணியை சுவீகரிப்பதற்காக இடம்பெற்ற நில அளவை செயற்பாடுகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் பலத்த எதிர்ப்பினால் குறித்த செயற்பாடுகள் கைவிடப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட  புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாலுள்ள மக்களுக்குச் சொந்தமான 30 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்காக நில அளவை செயற்பாடுகள் இன்று காலை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவ்விடத்தில் கூடிய பொது மக்களின் பலத்த எதிர்ப்பினால் குறித்த செயற்பாடு கைவிடப்பட்டது.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்டனி ஜெகநாதன் உள்ளிட்டோரும் அவ்விடத்தில் பிரசன்னமாகி கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில்  புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், நாயாறு உள்ளிட்ட பிரதேசங்களில் படையினரின் தேவைக்காக நேற்று முதல் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவை நடவடிக்கைகள் மூன்று தினங்கள் முன்னெடுக்கப்படுமென பிரதேசவாசிகளுக்கு ஏற்கனவே கடிதமூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் நிலஅளவை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளை வெளியிட்டு தடுத்து நிறுத்தி வருவதோடு இன்று காலை 9 மணி முதல் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right