இடம்பெற்றுவரும் இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில்,  ஆரம்பத்திலிருந்தே பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தியாவில் 17 ஆவது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி கடந்த மே மாதம்  19 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெற்றது. 

இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இடம்பெற்றது.  

இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.  ஆரம்பம் முதலே பா.ஜ.க. அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தது காணப்படுகின்றது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி பா.ஜ.க. கூட்டணி 150 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 58 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஏனைய கட்சிகள் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ரேபரேலியில் சோனியா காந்தியும் முன்னிலை பெற்றுள்ளனர். 

வாரணாசியில் பிரதமர் மோடி முன்னிலை பெற்றுள்ளார். இதேபோல் நட்சத்திர வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் ஆரம்பம் முதலே பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.