2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலமாக இலங்கையின் நிதி அமைச்சின் கீழ் வருமான உளவுப் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது. 

அதற்கமைய நாட்டில் பிரதானமாக வருமானம் சேகரிக்கும் பின்வரும் திணைக்களங்களின் தொழிற்பாட்டு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இப்பிரிவு அமைக்கப்படவுள்ளது.

 அவை இலங்கை சுங்கம், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகியனவாகும்.

அவற்றின் தொழிற்பாடுகளாக வருமானச் சேகரிப்பினை விரிவுபடுத்தல், சேகரிக்கப்படும் மொத்த வருமானத்தை அதிகரித்தல் மற்றும் பணக்கசிவு மற்றும் வரி ஏய்ப்பினை குறைத்தல் ஆகியன காணப்படுகின்றன.

உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் இவ்வாறன ஒழுங்கமையப்பெற்ற (CENTRAL LINK SYSTEM) கட்டமைப்பு காணப்படுகின்றது. 

இதே பாணியில் இலங்கையிலும் இந்த வருமான உளவுப் பிரிவு செயற்படவுள்ளது. 

எனவே இனிவரும் காலங்களில் இலங்கையில் ஒவ்வொருவரும் மிகவும் திட்டமிட்ட முறையில் தமது தொழில் மற்றும் ஏனைய செயற்படுகளினை செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக அமையவுள்ளது. 

ஏனெனில் இலங்கையில் மிகவும் குறைந்த விகிதாசாரமான மக்களே வரியினை செலுத்தி வருவதை நாம் கடந்தகால உள்நாட்டு வருமான வரி திணைக்களத்தின் அறிக்கையின் வாயிலாக தெரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

வரி செலுத்தவேண்டிய வருமானத்தினை பெற்றும் அதனை செலுத்தாமல் இருப்போரினை வருமான உளவுப் பிரிவின் உதவியுடன் இனங்கண்டு அவர்கள் செலுத்த வேண்டிய வரியினை சட்டரீதியாக பெற்று அப்படிப்பட்டவர்களையும் எதிர்வரும் காலங்களில் வரி செலுத்துவோராக கொண்டுவருவதே இதன் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இதன் மூலம் வரும்காலங்களில் வரி செலுத்துவோரின் விகிதாசரத்தினை படிப்படியாக அதிகரித்து அரசின் வரி வருமானத்தினை அதிகரிக்க இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமையபோகின்றது.

இலங்கையரான ஒவ்வொருவரும் வரிசெலுத்துவதனை தமது தலையாய கடமையாகக்கருதி அதற்கேற்ப செயற்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.

A.G.S. சுவாமிநாதன் சர்மா

( பட்டயக்கணக்காளர்,வரி ஆலோசகர், முகாமைத்துவ ஆலோசகர் )