(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்தின் மத்தியில்  உணர்ச்சிவசப்பட்டு தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். 

பாராளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து சர்ச்சை எழுந்த நிலையில் சபையில் தனது நியாயங்களை முன்வைக்க எழுந்த அமைச்சர் ரிஷாத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு அடக்க முயற்சித்தனர். 

எனினும் உரையாற்ற ஆரம்பித்த அமைச்சர் ரிஷாத், நண்பர் மஹிந்தானந்த என ஆரம்பித்தவுடன்  சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிபடுத்தினர். அதனையும் மீறி உரையாற்றிய அமைச்சர் ரிஷாத், சரி அவர் நண்பர் அல்ல, உறுப்பினர், எனினும் 9 ஆண்டுகள் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஒன்றாக இணைந்து செயற்பட்ட நபர்கள் நாங்கள், அதனால் தான் நண்பர் என்றேன். 

ஆனால்  மஹிந்தானந்த எம்.பி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானது. குறிப்பாக எனது ஆலோசகராக மௌலவி எவரும் இல்லை. எனது ஆலோசகராக இருவர் உள்ளனர். ஒருவர் ரோய் ஜெயசிங்க, இன்னொருவர் வைத்தியர் அசிஸ் இவர்கள் இருவரை தவிர வேறு எவருமே எனக்கு ஆலோசகராக இல்லை. அதேபோல் எனது இணைப்பாளர் ஒருவரை கைதுசெய்ததாக கூறியதும் முழுப்பொய். அதனை நான் முற்றாக நிராகரிக்கிறேன். அதேபோல் எனது உறவினர் எவரையும் கைதுசெய்யவில்லை. ஊடகங்கள் மிகவும் மோசமாக இவற்றை பிரசுரித்து வருகின்றது. ஊடக மாபியா இங்கு செயற்பட்டு வருகின்றது.

அதேபோல் இராணுவ தளபதிக்கு நான் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவில்லை. முஸ்லிம் விவகார அமைச்சரின் ஆலோசகர் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரியாத நபர்கள் சிலரால் தனது மகனை அழைத்து செயன்றதாக கூறி அவர்கள் குறித்து தகவல் கேட்குமாறு கேட்டுக்கொண்டார். நான் அமைச்சர் ருவான் விஜயவர்தனவை தொடர்புகொண்டு இது குறித்து வினவினேன். இராணுவ தளபதியையோ பொலிஸ்மா அதிபரையோ தொடர்புகொண்டு கேளுங்கள் என அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பின்னரே நான் இராணுவ தளபதியை தொடர்புகொண்டு மனிதாபிமான அடிப்படியில் தேடிப்பார்த்தேன். ஒருபோதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை. இவ்வாறு ஒருவரை தேடிப்பார்ப்பது தவறானதா? நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானது என்றார்.