உலக வாணிபத்துக்கு மிகவும் முக்கியமானதாக இந்துசமுத்திரம் விளங்குகின்ற நிலையில், கொழும்பு துறைமுகத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்கள் இணங்கியிருப்பதாக டோக்கியோ பங்குப் பரிவர்த்தனையின் சந்தை நிலைவர ' நிக்கீ ' அட்டவணையின் மூலம் தெரியவந்திருக்கிறது.

 தெற்காசியாவிலும் அதைச் சுற்றியும் கடல் போக்குவரத்தை மேம்படுத்துவதும் கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் பரும அளவை அதிகரிப்பதுமே இந்த கூட்டுச் செயற்திட்டத்தின் இலக்குகளாகும்.

அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தொடங்கப்படவிருக்கும் திட்டம் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் மூன்று நாடுகளும் விரைவில் கைச்சாத்திடவிருப்பதாக கூறப்படுகிறது.

 இந்த பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு சீனா அதன் நவீன பட்டுப்பாதை திட்டம் என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தை பயன்படுத்துகின்ற அதேவேளை, ஜப்பான் அதன் திறந்த பசுபிக் -இந்து சமுத்திர மூலோபாயத்திட்டத்தை தீவிரப்படுத்தி பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரமொன்றை வகிப்பதில் நாட்டம் காட்ட ஆரம்பித்திருக்கின்ற ஒரு நேரத்தில் மூன்று நாடுகளும் கொழும்பு துறைமுக அபிவிருத்திக்கு இணங்கியிருக்கின்றமை கவனிக்கத்தக்கதாகும். 

புதிதாக விஸ்தரிக்கப்பட்ட கொழும்பு துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் கிழக்கு கொள்கலன் முனையத்தை மூன்று நாடுகளும் அபிவிருத்தி செய்யும். 

இந்த திட்டத்தில் கோர்ப்பரேட் நிறுவனங்களும் பங்கேற்பதற்கு  வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.