(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என  பாராளுமன்ற  உறுப்பினர்  உதய  கம்மன்பில தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு  இவர் ஆதரவு வழங்கினார்  என்பதுடன், அரச  வளங்களுக்கு   சேதம் விளைவித்தார் என்று பல குற்றச்சாட்டுக்கள்  ஆதார பூர்வமாக  சுமத்தப்பட்டன. இன்று வரை  இவர்  தன் மீது  சாட்டப்பட்டுள்ள குற்றங்களை முறையாக திருத்திக் கொள்ளவில்லை. மாறாக  பிரதமரின்  உதவியினை  நாடி பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வை பெற்றுக் கொண்டார். இம்முறையும் இவ்வாறான   செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. ஒரு தீர்வை  நிச்சம் பெற்றே   தீர வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதம்  முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை  கேலிக்கூத்தானது.   கடந்த வருடம்  நவம்பர் மாதம்  பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேரணையை கொண்டு  வருவதாக குறிப்பிட்டவர்கள் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணை என்று குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கத்தை பாதுகாக்கும் பிரேரணையையே  கொண்டு  வந்துள்ளார்கள்.  

அரசாங்கத்திற்கு எதிரான  பிரேரணை  வெற்றிப் பெற்றால்  பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும்வரை எந்த தரப்பினர்  அரசாங்கத்தை அமைப்பார்கள். வெறும் 06 உறுப்பினர்களை கொண்டுள்ள  மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்தை அமைக்க முடியுமா. 

எதிர்தரப்பினர் அரசாங்கம் அமைப்பதற்கும்  விரும்பம் இல்லாத ஜே. வி. பி. யினர் யாரை பலப்படுத்த முனைகின்றார்கள் என்பதை  நாட்டு மக்கள் புரிந்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே    தொடர்ந்து   பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு  ஆதரவாக  செயற்படாமல்  மக்கள் விடுதலை முன்னணியினர் தாம் தவறாக அரசாங்கத்திற்கு எதிராக  பிரேரணையை  பாரளுமன்றத்தில் சமர்ப்பித்து விட்டோம்.  என்று  குறிப்பிட்டுக் கொண்டு   பிரேரணையை மீள பெற்றுக் கொள்வதே சிறந்த தீர்வாக அமையும் என்றார்.