(நா.தினுஷா)

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் தனித்தனியாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அரசாங்கத்தால் தோற்கடிக்க முடியும். 

பதியுதீனுக்கு எதிரான குற்றசாட்டுக்கள் குறித்து பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் பின்னர் எடுக்கப்படகூடிய தீர்மானத்துக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் கல்வி அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். 

அலரிமாளிகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,  

எதிரணியினர் பாராளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சமர்ப்பித்துள்ளனர். 

இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டத்தில் விசேடமாக ஆராயப்பட்டது. 

இந்த கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட காரணங்களுக்கு அமைவாக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுமாக இருந்தால் அனைத்து கட்சிகளினதும் நிலைப்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.  

ஆகவே சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து அந்த குழுவின் தீர்மானத்துக்கு அமைய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான குற்றம் நிரூபிக்கப்படுமாக இருந்தால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எந்த குழப்புமும் இல்லாமல் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். 

அவ்வாறு இல்லாமல் கட்சி என்ற அடிப்படையிலோ அல்லது அரசாங்கம் என்ற அடிப்படையிலே வெவ்வேறு கொள்கை அனுகுமுறைகளை எடுக்க முடியாது. அதேபோன்று எவராவது ஒருவர் மீது நம்பிக்கை இல்லை என்று கருதுவார்களாக இருந்தால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான தகுந்த சான்றுகள்; அவசியம். அவ்வாறு இருந்தால் மாத்திரமே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியும். 

இது தொடர்பில் அனைவரும் ஒவ்வொரு நிலைபாட்டிலேயே உள்ளனர். கடந்த மாதம் இடம்பெற்ற தொடரகுணடுத்தாக்குதல்களை தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் என்ற வகையில் பெரும்பான்மையின் அடிப்படையில் இந்த பிரச்சினைக்குதீர்வை வழங்க வேண்டும். அதனடிப்படையிலேயே இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.