ரஜனிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தின் புகைப்படங்கள் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

பொலிஸ் சீருடையில் படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜனியை திருட்டுத் தனமாக படம் பிடித்து வெளியிட்டனர். இதன்மூலம் தர்பாரில் பொலிஸ் அதிகாரியாக ரஜனி நடிப்பது உறுதியானது.

அதன் பின்னர் மும்பையில் படப்பிடிப்பில் ரஜனிகாந்த் பங்கேற்றபோது அந்தக் காட்சிகளையும் கைத்தொலைபேசிகளில் படம்பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இதனால் படத்தில் நடிக்கும் அவரது தோற்றம் தெரியவந்தது. அதேபோன்று நயன்தாரா நடித்த காட்சிகளும் வெளியாகி, அவரது தோற்றத்தையும் முன்கூட்டியே தெரியப்படுத்தின. இந்த நிலையில் படித்தில் ஒரு வரிக் கதையும் இப்போது வெளியாகியுள்ளது.

படத்தில் நடிக்கும் இந்தி நடிகர் திலீப் தாஹிர் கதையை கசிய விட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கூறும்போது, தர்பார் படத்தில் ரஜனிகாந்த் மும்பையை சுத்தப்படுத்தும் பொலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு நான் உதவியாக வருகின்றேன் என்றார்.

இதன்மூலம் மும்பை தாதாக்களையும், ரவுடிகளையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளும் பொலிஸ் அதிகாரியாக ரஜனிகாந்த் நடிப்பது உறுதியாகியது. 

படத்தின் கதையை வெளிப்படுத்திய திலீப் தாஹீர் மீது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கோபத்தில் உள்ளனர். இந்த படத்தில் ரஜனிகாந்த் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், என்கவுணடர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜனிக்கு ஜோடியாக நயன்தார நடிப்பதாகவும் கூறப்படுகிறது.