(இராஜதுரை ஹஷான்)

காலம் தாழ்த்தினால்  பாராளுமன்றத்தில் அசம்பாவிதங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர்  மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதை விடுத்து  சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணையை காலம் தாழ்த்தி கடந்த காலங்களில் ஆளும் தரப்பினருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லா பிரேரணையை போன்று  இதனையும்  மறக்கடிக்கவே  முயற்சிகள் இடம் பெறுகின்றது. 

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவாக  விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் தந்திரங்களை  இம்முறையும் பிரயோக  முனைந்தால் பாராளுமன்றத்திற்கும் அரசியல் நெருக்கடி காலத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படும் என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன் கிழமை இடம்  பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அடிப்படைவாதகளின் தாக்குதலை தொடர்ந்து  அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை  கொண்டு வரப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பினதும், மக்கள் விடுதலை முன்னணியினதும் நிலைப்பாடு  இன்று  குறிப்பிடப்படுவதாக  குறிப்பிடப்பட்டது.

ஆனால்  ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க கடந்த காலங்களில் எவ்வாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டாரோ அதே  போன்று மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாக்க  அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை  கொண்டு வர போவதாக குறிப்பட்டுள்ளார்.