(செ.தேன்மொழி)

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரத்தினபுரி நகரத்தைப் புகைப்படமெடுத்ததாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர்களை மீண்டும் நாளை மறுதினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அங்கமன பல்லேகந்த பாதுகாப்பு வனப்பகுதியிலிருந்து இரத்தினபுரி நகரத்தைப் புகைப்படம் எடுத்த மூவரைக் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார்  தெரிவித்தனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நகரத்தைப் புகைப்படம் எடுப்பதாக  பிரதேந வாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமையவே இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி நகரத்தைச் சேர்ந்த மொஹமட் நஸீர் மொஹமட் நப்ராத் , மொஹமட் பவுஷ் மொஹமட் அவுசான் மற்றும் கே. அனுஷ்க தில்ஷான் எனப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து நவீன தொழிநுட்ப வசதியுள்ள கெமராக்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் இலக்கத் தகடுகள், இராணுவத்தினர் அணியும் தொப்பியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை இன்று இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..

இதன்போது பிரதேச வாசிகளுக்காக வாதாடிய சட்டத்தரணிகள் அவர்களிடமிருந்த இலக்கத் தகடுகள் குறித்தும்,இராணுவ தொப்பி குறித்தும் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மூன்றாவது சந்தேக நபருக்காக வாதாடிய சட்டத்தரணி சந்தேக நபர் குறித்த தினம் இரத்தினபுரி நகரத்தின் வெசாக் தின அலங்காரங்களைக் கவனத்திற் கொண்டே புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த போதும் நீதவான் அவர்களைத் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்போது சந்தேகபரிடமிருந்து மீட்கப்பட்ட தொலைப்பேசி தொடர்பிலும் பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.