(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கும் சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம்.

அத்துடன் அடுத்து சில மாதங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அனைத்தையும் முற்றாக ஒழிப்போம் என அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாகவும் அதன் பின்னர் கடந்த 13ஆம் திகதி காடையா்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவும் நாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டிருக்கின்றது. என்றாலும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

மேலும் பயங்கரவாத தாக்குதல் காரணமாக உள்நாட்டு,வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை தைரியப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

 குறிப்பாக சுற்றுலாத்துறை வியாபாரிகளுக்கு சலுகைகளை வழங்க தீர்மானித்திருக்கின்றோம். அவர்களின் வட்டி, கடன் தொகைகளுக்கு ஒரு வருடத்துக்கு சலுகை வழங்க இருக்கின்றோம்.

அத்துடன் தலைதூக்கியுள்ள பயங்கரவாதத்தை எமது பாதுகாப்பு பிரிவினரின் ஆதரவுடன் இன்னும் சில மாதங்களில் முற்றாக ஒழிப்போம். அதேபோன்று காடையர்களின் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாதவகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பயங்கரவாத நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரமே பாதிக்கப்படுகின்றது.அதனால் பயங்கரவாத மற்றும் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் ஆளும்,எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து செயற்படவேண்டும். அதன் மூலமே நாட்டை கட்டியெழுப்பலாம் என்றார்.