(இராஜதுரை ஹஷான்)

இடம்பெறவுள்ள தேர்தலில்  மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காகவே மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசப்பற்றுடன் செயற்படுகின்றார்கள். நாட்டு மக்கள் தற்போது அரசியல் ரீதியில் விழிப்புடனே  உள்ளார்கள். 2015ஆம் ஆண்டு  செய்த தவறினை  திருத்திக் கொள்வதற்காக தேர்தலை எதிர்பார்த்துள்ளார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கும்,   மக்கள் விடுதலை முன்னணியிக்கும்  மக்கள்  ஜனநாயக ரீதியில் தகுந்த பாடம்  புகட்டுவார்கள்  என பாராளுமன்ற உறுப்பினர்   காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக   சமர்ப்பிக்கப்பட்டுள்ள  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு  வழங்க  தயார்   ஆனால்  இதற்கான  தருணம் இதுவல்ல ,  முதலில் அடிப்படைவாதிகளுக்கு   ஆதரவு வழங்கினார்  என்று  குற்றஞ்சாட்டப்பட்ட   அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக  கடுமையான சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள  அவரை பதவி விலக்க வேண்டும். அதன் பின்னரே அரசாங்கத்திற்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்று  தம்மை தாமே குறிப்பிட்டுக் கொள்ளும்  மக்கள் விடுதலை முன்னணி ஒருபோதும் அரசாங்கத்திற்கு குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு  எதிராக செயற்படவில்லை. அரசாங்கத்தின் முகவராகவே   இவர்கள் அனைவரும் செயற்பட்டார்கள்.  நாட்டில் இன்று முறையற்ற அரசாங்கம் ஒன்று   அதிகாரத்தில் இருப்பதற்கும், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும்   மக்கள் விடுதலை முன்னணியும்  பொறுப்பு கூற வேண்டும்.

அரசாங்கத்த விமர்சிக்கும்  தகுதி   பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவிற்கு கிடையாது. தற்போதும் நாட்டு நலனுக்காக  அரசாங்கத்திற்கு எதிராக பிரேரணையை கொண்டு வரவில்லை.  ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவே பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  இந்த  பிரேரணை ஒருபோதும் வெற்றிப் பெறாது.   அமைச்சர்  ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான  நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு  வழங்க  முன்வந்நவர்களை தடுக்கும் அரசியல்  சூழ்ச்சியினை   பிரதமர் ரணில்  விக்ரமசிங்க வகுத்துள்ளார்,   இதனை   அனுர குமார திஸாநாயக்க செயற்படுத்துகின்றார்.