மரண ஓலங்கள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்­டி­ருக்­கின்­றன. இரத்த வாடைகள் இன்­னமும் நீங்­க­வில்லை. உடல் சிதைந்து பலி­யா­ன­வர்கள் புதை­யுண்ட இடங்­களில் பாதிக்­கப்­பட்ட உற­வுகள் வடித்த கண்ணீர் கூட காய­வில்லை. இதற்குள் இன­வாதம் பேசி இனங்­க­ளுக்கு இடையில் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த ஒரு கும்பல் முயற்­சித்து வரு­கின்­றது. இந்த கும்­பலின் நோக்­கத்தின் பிர­காரம் நாட்டின் சில இடங்கள் கல­வர பூமி­யாக காட்­சி­ய­ளித்துக் கொண்­டி­ருக்­கின்­றது.

கடந்த 21 ஆம் திகதி மேற்­கொள்­ளப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலில் 250க்கும் மேற்­பட்ட அப்­பா­விகள் கொல்­லப்­பட்­டார்கள்.

இந்த கோரச் சம்­ப­வத்தை தொடர்ந்து பாதிக்­கப்­பட்ட மக்கள் ஒரு­வேளை  உண­வுக்கே மற்­ற­வர்­க­ளிடம் கையேந்தும் துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கத்தின் அசட்­டை­யான செயற்­பாடே, உண்டு குடித்து சந்­தோ­ச­மாக வாழ்ந்து வந்த மக்­களை இந்த பரி­தாப நிலைக்கு தள்­ளி­யுள்­ளது.

இந்த இடத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக எவ்­வாறு உத­வி­களை வழங்க முடியும்? மரண வலியில் இருந்து எவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்­களை மீட்­டெ­டுக்க முடியும்? நாட்­டையே புரட்டிப் போட்­டுள்ள பயங்­க­ர­வா­தத்தை ஒன்­றாக சேர்ந்து எவ்­வாறு முறி­ய­டிக்­கலாம்? நாட்டில் வாழும் இனங்­க­ளுக்கு இடையில் பிரச்­சினை ஏற்­பட்டு விடாமல் எவ்­வாறு ஒன்­றி­ணைந்து செயற்­ப­டலாம்  என்­பது தொடர்பில் அர­சி­யல்­வா­தி­களும் மதத்­தலை­வர்­களும் இணைந்து ஆக்­க­பூர்­வ­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கலாம்.

ஆனால் அதற்கு அப்பால் நின்றே, சில அர­சி­யல்­வா­தி­களும் சில மதத் தலை­வர்­களும் செயற்­பட்டு வரு­கின்­றமை கவ­லை­ய­ளிக்­கின்­றது.

ஒரு கட்­டத்தில் நல்­லி­ணக்கம், ஒற்­றுமை, மனித உரிமை என வாய்­கி­ழிய பேசி­ய­வர்கள் இன்று இன­வா­தத்தை கக்­கி­க்கொண்­டி­ரு­க்கின்­றார்கள்.

நாடு தற்­போது அசா­தா­ரண சூழ்­நி­லையில் உள்­ளது. ஒவ்­வொரு பொது மகனும் மரண அச்­சத்­துடன் ஒவ்­வொரு நிமிடத்­தையும் கடத்திக் கொண்­டி­ருக்­கின்றான். இதற்கு மத்­தியில் இன­வாதம் பேசு­வது என்­பது எவ்­வி­தத்தில் சாலப்­பொ­ருந்­தும் என தெரி­ய­வில்லை.குறிப்­பாக கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர்,இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல எனவும் இலங்­கை­யர்­களின் நாடு எனவும் நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருந்தார்.

என்­னாலும் சிலர் போன்று கார்ட்போர்ட் வீர­னாக முடியும். இலங்கை சிங்­கள நாடு பௌத்த நாடு, சிங்­க­ள­வர்­க­ளுக்கு விரும்­பி­யது போன்று வாழ முடியும் என பிர­சாரம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் இலங்கை பௌத்­தர்­களின் நாடு அல்ல. இலங்­கை­யர்­களின் நாடு. அந்த இலங்­கை­யர்­களின் நாட்டில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக உள்­ளனர்.

நாங்கள் பெரும்­பான்­மை­யினர் என்ற கார­ணத்­திற்­காக எங்கள் நோக்­கத்தை மற்­ற­வர்கள் மீது திணிக்க முடி­யாது என மங்­கள சம­ர­வீர சுட்­டிக்­காட்­டி­யிருந்தார்.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள ஸ்திர­மற்ற சூழ்­நி­லையை கருத்தில் கொண்டு,  நாட்டு மக்­களை ஓர­ணியில் இணைக்க வேண்டும் என்­ப­தற்­கா­கவே அர­சாங்­கத்தின் அமைச்சர் என்ற வகை­யில்­ மங்­கள சம­ர­வீர இந்த கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால்..! இதனை புரிந்­து­கொள்­ளாத இன­வா­தத்தை வைத்து அர­சியல் செய்யும் சில அற்ப அர­சியல் வாதிகள், அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருந்த ஆக்­க­பூர்­வ­மான கருத்தை தூக்­கிப்­பி­டித்­து­கொண்டு, பெரும்­பான்மை மக்கள் இடையே இன­வா­தத்தை தூவி வரு­கின்­றனர்.

அதா­வது இது பௌத்த நாடு. சிங்­கள மக்­க­ளுக்கு மாத்­திரம் சொந்­த­மான நாடு. மங்­கள சம­ர­வீர எவ்­வாறு இந்த கருத்தை கூற முடியும். இந்த அர­சாங்கம் சிங்­கள மக்­களை காட்டிக் கொடுத்து விட்­டது. இதற்கு எதி­ராக நாம் ஒன்­றி­ணைய வேண்டும் என சில அர­சியல்வாதி­களும் பௌத்த பிக்­கு­களும் இன­வாதம் பேசி வரு­கின்­றனர்.

உண்­மையில் இந்த நாடு யாருக்கு சொந்­த­மா­னது. யார் ஆட்சி செய்ய வேண்டும் என விவாதம் செய்­வ­தற்­கான தருணம் இது­வல்ல.

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண நிலை­மையை சீராக்க அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் கருத்தின் பிர­காரம் 'நான் இலங்­கையன்" என்ற எண்­ணத்தை ஒவ்­வொரு குடி­மகன் மன­திலும் உரு­வாக்­கவும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வுமே அவர் அவ்­வா­றான கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால் இன­வா­திகள் எரியும் நெருப்பில் பெற்­றோலை ஊற்­று­வது போன்று இந்த கருத்தை வைத்து சமா­தா­னத்தை குழப்ப முயற்­சிக்­கின்­றனர்.

இதற்­கி­டையில் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்று 1 மாதம் கடந்­துள்ள நிலையில் தற்­போது இனந்­தெ­ரி­யாத ஒரு கும்பல் முஸ்லிம் மக்­களை  இலக்கு வைத்து தாக்கி வரு­வ­தோடு அவர்­களின் வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள், வாக­னங்கள், பள்­ளி­வா­சல்­களை கடு­மை­யாக சேதப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

நாட்டின் அச்ச நிலை­மையை தமக்கு சாத­க­மாக்கி தமது சுய இலக்­கு­களை அடைந்­து­கொள்ள முஸ்லிம் மக்கள் மீதான காழ்­ப்பு­ணர்ச்சி தாக்­கு­தல்­களை இந்த மர்ம கும்பல் கட்­ட­விழ்த்து விட்­டுள்­ளது. இதன் பின்­ன­ணியில் அர­சியல் சுய­இ­லா­பங்­களும் மறைந்­தி­ருக்­கலாம் என பாதிக்­கப்­பட்ட மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

நாட்டின் அமை­தியை சீர்­கு­லைத்து  கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த ஒரு கும்பல் முயற்சி செய்து வரு­கின்­றது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்த கருத்தும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது பார­தூ­ர­மான விட­ய­மாகும். இந்த மர்ம கும்­பலின் இலக்கை அடைந்­து­கொள்ள இட­ம­ளிக்­காது பாது­காப்பு தரப்பு முன்­னின்று சரியான முறையில் செயற்பட வேண்டும்.

சில இடங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போதே முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் சேதப்­படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடு­களை முன்னெடுப்பதோடு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

மேலும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்தை வைத்து 'இந்த நாடு யாருடையது?' என இனவாத அரசியலை மேற்கொள்ளாது ஜனநாயக நாட்டில் அனைவரும் சமமான உரிமை உள்ளது என்பதை பிரதிபலிகும் வகையில் அரசியல்வாதிகள் முன்னுதாரணமாக பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எம்.டி. லூசியஸ்