ஐஎஸ்.­ ஐஎஸ். பயங்­க­ர­வா­தி­களின் வழி­ந­டத்­தலில் அல்­லது தூண்­டு­தலில் உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று நடத்­தப்­பட்ட தொடர் தற் கொ­லைக்­குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து, முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள வன்­மு­றைகள் நாட்டின் ஸ்திர­நி­லை­மையை மேலும் மோச­மாக்­கி­யுள்­ளன.  

தற்­கொலைத் தாக்­கு­தல்கள் நடை­பெற்று மூன்று வாரங்­களின் பின்னர் சிலாபம் மற்றும் குரு­ணா­கல் மாவட்­டங்­களில் முஸ்­லிம்கள் மீது மிக மோச­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. இதனால் பெரும் எண்­ணிக்­கை­யான முஸ்­லிம்கள் தமது வீடு­களை இழந்து அக­தி­க­ளா­கியுள்ளனர். அவர்­களின் வர்த்­தக நிலை­யங்கள் அடித்து, நொறுக்கி தீயி­டப்­பட்­டி­ருப்­ப­தனால், அந்த சமூ­கத்தின் பொரு­ளா­தாரம் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. பள்­ளி­வா­சல்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தால், அவர்கள் ஆன்­மீக ரீதி­யான பாதிப்­புக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.  

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்­கு­தல்­களை தீவிர மத­வெ­றி­கொண்ட முஸ்­லிம்­க­ளா­கிய சிறு குழு­வி­னரே நடத்­தி­யி­ருந்­தாலும், முஸ்­லிம்கள் அனை­வரும் ஒட்­டு­மொத்­த­மாகப் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும், பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளா­க­வுமே ஏனைய சமூ­கங்­க­ளினால் - குறிப்­பாக – பௌத்த சிங்­க­ள­வர்­க­ளினால் நோக்­கப்­ப­டு­கின்­றார்கள். சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றார்கள். 

தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளிலும், உல்­லாசப் பய­ணி­களின் ஆடம்­பர ஹோட்­டல்­க­ளி­லுமே நடத்­தப்­பட்­டன. இந்த கொடூரத் தாக்­கு­தல்­களில் 250க்கும் மேற்­பட்­ட­வர்கள் கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். அவர்­களில் 40க்கும் மேற்­பட்டோர்  வெளி­நாட்­ட­வர்கள். அதே­வேளை, கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் கிறிஸ்­த­வர்கள்; தமி­ழர்கள். 

இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்குக் கார­ண­மா­ன­வர்கள் முஸ்­லிம்கள் என்று பொது­வாக விரல் நீட்­டப்­பட்ட போதிலும், தாக்­கு­தல்­களில் கூட்டுப் படு­கொலை செய்­யப்­பட்ட கிறிஸ்­த­வர்­களோ அல்­லது கிறிஸ்­த­வர்­களை உள்­ள­டக்­கிய தமி­ழர்­களோ, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்மம் தீர்க்கும் வகையில் அல்­லது பழி­தீர்க்கும் வகையில் எதிர்த்தாக்­கு­தல்கள் எத­னையும் நடத்­த­வில்லை. ஆத்­தி­ர­முற்று கட்­டு­மீறி நடந்து கொள்­ளவும் இல்லை.  

கொடூ­ர­மான குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கும், கோரக்­கொ­லை­க­ளுக்கும் எதி­ராக பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­தினர் உணர்ச்சி வசப்­பட்டு கிளர்ந்து எழுந்­து­விடக் கூடாது. நிதா­னத்தைக் கடைப்­பி­டிக்க வேண்டும். வன்­மு­றை­களில் ஈடு­பட்­டு­விடக் கூடாது என்று கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை பகி­ரங்க கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதே­போன்று பௌத்த மதத் தலை­வர்கள் உள்­ளிட்ட ஏனை­யோரும் அமை­தி­ காக்க வேண்டும். சமா­தா­னத்­திற்குப் பங்கம் ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்ற கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்­தனர். 

இதன் கார­ண­மாக தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் கோரக்கொலை­க­ளுக்கு எதிர்­ வி­னை­யான வன்­மு­றைகள் எதுவும் இடம் ­பெ­ற­வில்லை. மக்கள் அமை­தி­காக்க வேண்டும் என்ற கோரிக்­கையை வலி­யு­றுத்தி சமா­தா­னத்தை நிலை­நாட்­டு­வ­தற்­காக கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை துரி­த­மா­கவும் நிதா­ன­மா­கவும், பொறுப்­போடும் செயற்­பட்­டதைப் பல­த­ரப்­பி­னரும் பாராட்­டி­னார்கள். நாடா­ளு­மன்­றத்­திலும் அவ­ரு­டைய செயற்­பாடு குறித்து பெரு­மை­யாகக் கருத்­து­ரைக்­கப்­பட்­டது. அத்­துடன், சமா­தா­னத்­திற்­கான நோபல் பரி­சுக்­காக அவரைப் பரிந்­து­ரைக்க வேண்டும் என்ற கோரிக்­கை­யும்­கூட முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தது. 

உடல்கள் சிதறி பரவ, ஆல­யங்கள் இரத்த வெள்­ளத்தில் தோய்ந்­த­தனால், கிறிஸ்­த­வர்கள் ஆறாத் துயரில் ஆழ்ந்து போனார்கள். தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளினால் நாட்டு மக்கள் அனை­வ­ருமே அச்­சத்தில் உறைந்து போனார்கள். அந்த அள­வுக்கு மோச­மான சம்­ப­வ­மாக அந்தத் தாக்­கு­தல்கள் அமைந்­தி­ருந்­தன.

ஆனால் குண்டுத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு மூன்று வாரங்கள் கழிந்த பின்னர், வடமேல் மாகா­ணத்தின் பல இடங்­களில் முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டது ஏன்? இதற்குக் காரணம் என்ன? - இந்தக் கேள்­விகள் பல­ரு­டைய மனங்­க­ளிலும் முட்டி மோதிக்­கொண்­டி­ருக்­கின்­றன. 

முகப்­புத்­தகப் பக்­கத்தில் சிலா­பத்தைச் சேர்ந்த ஒருவர் பதி­விட்ட கருத்து பல்­வேறு வித­மாக இன­வாத ரீதியில் அர்த்­தப்­ப­டுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து, சிலா­பத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகத் தாக்­கு­தல்கள் நடை­பெற்­றன. அதனால், அங்கு ஏற்­பட்ட பதட்ட நிலை­மையைத் தணிப்­ப­தற்குப் பொலி­சாரும் படை­யி­னரும் இணைந்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டனர். ஊர­டங்கு உத்­த­ரவும் அங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

எதிர்பார்த்தவாறு அந்த வன்­மு­றைகள் சிலா­பத்­துடன் கட்­டுக்­க­டங்­க­வில்லை. மினு­வாங்­கொட, ஹெட்­டிப்­பொல, பிங்­கி­ரிய போன்ற கிரா­மிய நகர்ப்­பு­றங்­க­ளுக்கும், உட்­புற கிரா­மங்­க­ளுக்­கும்­கூட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் பர­வின. இதன்­போது முஸ்­லிம்கள் தாக்­கப்­பட்­டனர். வீடு­களில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். அவர்­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிiலை­யங்கள் கொள்­ளை­யி­டப்­பட்டு, எரி­யூட்­டப்­பட்­டன. வன்­மு­றைகள் மிக மோச­மாக இடம்­பெற்­ற­தை­ய­டுத்து, அந்தப் பகு­தி­களில் முழு­நேர ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. வன்­மு­றைகள் கட்­டுக்­க­டங்­காமல் நிலை­மைகள் மோச­மா­கி­வி­டாமல் தடுப்­ப­தற்­காக நாட­ளா­விய ரீதியில் அரசு இரவு நேர ஊர­டங்கு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

தனிச்­சிங்­களச் சட்­டமும் ஸ்ரீ எழுத்து வன்­மு­றையும்

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்தத் தாக்­கு­தல்­களை சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­களே நடத்­தி­னார்கள் என்று பர­வ­லாக நம்­பப்­ப­டு­கின்­றது. சிங்­கள பௌத்த தேசி­ய­வாத அர­சியல் நிலைப்­பாடு இதன் பின்­ன­ணியில் தூண்­டு­த­லாக இருந்­தது என்ற சந்­தே­கமும் உள்­ளது. இது முதற் தட­வை­யல்ல. இதற்கு முன்­னரும் பல தட­வைகள் முஸ்­லிம்களை சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வா­தி­க­ள் இதை­யும்­விட மோச­மாகத் தாக்­கியி­ருக்­கின்­றார்கள்.  

அந்த வகையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தத்தின் தொடர்ச்­சி­யான வன்­மத்தின் அடை­யா­ள­மா­கவே இப்­போ­தைய தாக்­கு­தல்கள் இடம்பெற்­றி­ருக்­கின்­றன. இந்தத் தாக்­கு­தல்­களின் பின்னால் நீண்­டதோர் எதிர்ப்பு அர­சியல், மத­வாத அர­சியல், இன­வாத அர­சியல் என்ற பல்­வேறு முகங்கள் மறைந்­தி­ருக்­கின்­றன. 

ஆங்­கி­லே­ய­ரிடம் இருந்து இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­த­போது, தமி­ழர்கள் உயர் அதி­கார பீடங்­க­ளிலும், துறை­சார்ந்த பத­வி­க­ளிலும், பொரு­ளா­தா­ரத்­திலும் உயர்ந்த நிலையில் இருந்­தார்கள். மன்­ன­ராட்­சிக்கு முடி­வேற்­பட்டு மக்­க­ளாட்­சி­யா­கிய ஜன­நா­யக ஆட்சி மலர்ந்­த­போது, பெரும்­பான்­மை­யான இனம் என்ற வகை­யில ஆட்சி நிர்­வாகம் சிங்­க­ள­வர்­களின் கைகளில் சென்­ற­டைந்­தது. அந்த ஆட்சி அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி படிப்­ப­டி­யாக சிங்­கள மக்­களை முன்­னேற்றி முதல் நிலைக்குக் கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அன்­றைய தேசியத் தலை­வர்கள் என கரு­தப் ­ப­டு­கின்ற பெரும்­பான்மை இன அர­சியல் தலை­வர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

சீரான திட்­டத்­துடன், அர­சியல் இரா­ஜ­தந்­திரப் போக்கில் சிங்­க­ள­வர்கள் பெரும்­பான்­மை­யாக அரச மற்றும் தனியார் துறை­களில் செல்­வாக்கு பெறு­வ­தற்­கான வழி­வ­கைகள் செய்­யப்­பட்­டன. இதனை அடி­யொட்­டியே சிங்­களம் மட்­டுமே ஆட்சிமொழி என்ற அர­சியல் நிலைப்­பாடு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­கவின் ஆட்­சியில் 1956 ஆம் ஆண்டு தனிச்­சிங்­கள சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டதைத் தொடர்ந்து 1958 ஆம் ஆண்டு ஸ்ரீ என்ற சிங்­கள எழுத்தை முதன்­மைப் ­ப­டுத்தி சிங்­கள மொழியைத் தமிழ் மக்கள்மீது திணிக்கும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

அரச மொழி என்­ற­த­னாலும், தனிச்­சிங்­களச் சட்டம் என்­ற­த­னாலும் தமிழ் அரச ஊழி­யர்கள் பதவி உயர்­வுக்­காக சிங்­க­ள­மொழி கற்­றி­ருக்க வேண்டும் என்ற நிர்ப்­பந்தம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தொடர்ந்து பாட­சா­லை­களில் மாண­வர்கள் சிங்­கள மொழி கற்க வேண்டும் என்ற கட்­டாய நிலை­மையும் உரு­வாக்­கப்­பட்­டது. இதனால் இனக்­க­ல­வரம் பெரிய அளவில் நாட்டில் மூண்­டது. 

இந்த இனக்­க­ல­வ­ரத்­தின்­போது ஸ்ரீ என்ற சிங்­கள எழுத்து வாகனப் பத­வி­லக்­கத்தில்; இணைக்­கப்­பட்­டது. வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் பெயர்ப்­ப­ல­கை­க­ளிலும், பொது இடங்­களில் வைக்­கப்­ப­டு­கின்ற பொது அறி­வித்தல் பல­கை­க­ளிலும் தமிழ் எழுத்­துக்­களை, தார் பூசி அழித்து, அவ­மா­னப்­ப­டுத்­து­வதன் மூலம் வன்­மு­றைகள் தூண்­டி­ வி­டப்­பட்­டன. பதி­ல­டி­யாக வெகு சில இடங்­களில் சிங்­கள எழுத்­துக்கள்மீதும் தார் பூசப்­பட்­டது. சிங்­க­ள­வர்கள் தமி­ழர்­களைப் பல இடங்­க­ளிலும் தாக்­கி­னார்கள், கடைகள் வீடு­களும் எரி­யூட்­டப்­பட்­டன. 

வீதி­களின் திருத்த வேலைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த தார் நிறைந்த தகரக் கொள்­க­லன்­களைக் கொதிக்க வைத்து திரவ வடிவில் தார் எடுக்­கப்­பட்டு  பெயர்ப்பல­கை­களில் தமிழ் எழுத்­துக்கள் மீது பூசு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அவ்­வாறு தார் கொதிக்­க­வைக்­கப்­பட்ட தகரக் கொள்­க­லன்­களில் கையில் அகப்­பட்ட தமி­ழர்­களைத் தூக்கிப் போட்டு சித்­தி­ர­வதை செய்து கொலை செய்த சம்­ப­வங்­களும் அப்­போது இடம்­பெற்­றி­ருந்­தன. 

தொடரும் மத, இன­வாத வன்­மு­றைகள்

சிங்­க­ளத்­தையும் சிங்­க­ள­வர்­க­ளையும் முதன்மை நிலைக்கு உயர்த்தி, சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களை இரண்­டாந்­தரப் பிர­ஜை­க­ளாக வைத்­தி­ருக்க வேண்டும் என்­பதே இந்த தனிச்­சிங்­கள சட்ட உரு­வாக்­கத்தின் பின்­ன­ரான இன வன்­மு­றையின் நோக்­க­மாகும். சிங்­களம் மட்டும் என்ற புதிய அரச நிலைப்­பாட்டைத் தொடர்ந்து தமி­ழர்கள் மீது நடத்­தப்­பட்ட வன்­முறைத் தாக்­கு­தல்கள் அத்­துடன் நிற்­க­வில்லை. அவ்­வப்­போது குறிப்­பாக தேர்­தல்­க­ளின்­போது தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்­டன. அதன் நீட்­சி­யா­கவும் உச்ச கட்­ட­மா­கவும் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கல­வரம் என்ற பெயரில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக மிகப் பெரிய அளவில் இன அழிப்பு நட­வ­டிக்­கை­யாக கொழும்­பிலும் நாட்டின் முக்­கி­ய­மான மாகாணத் தலை­ந­க­ரங்கள், சிறு­ந­க­ரங்­க­ளிலும் மிக மோச­மான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. 

நாடெங்­கிலும் பரந்து வாழ்ந்து வர்த்­தக  நட­வ­டிக்­கை­க­ளிலும் வியா­பார நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்­டி­ருந்த தமி­ழர்கள் வடக்கு நோக்­கியும் இந்­தி­யாவை நோக்­கியும் துரத்­தி­ய­டிக்­கப்­பட்­டார்கள். அவர்­களின் இருப்பும், தமி­ழர்­களின் பொரு­ளா­தா­ரமும் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டன. மறு­பக்­கத்தில் அந்த பொரு­ளா­தார வாய்ப்­புக்கள் சிங்­களப் பேரி­ன­வா­தி­க­ளினால் கப­ளீ­கரம் செய்­யப்­பட்­டன. 

மறு­பு­றத்தில், அர­சியல் உரி­மைக்­கான தமி­ழர்­களின் தொடர்ச்­சி­யான போராட்­டங்கள், ஆயுதப் போராட்­டத்தை நோக்கி நகர்ந்­த­தை­ய­டுத்து, நாட்டின் அர­சியல் கொதி­நி­லைக்குத் தள்­ளப்­பட்­டது. பயங்­க­ர­வா­த­மாகச் சித்­திரிக்­கப்­பட்ட தமி­ழர்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­ட­மா­கிய யுத்தம் 2009 ஆம் ஆண்டு சூட்­சு­ம­மான முறையில், அனைத்­து­லக நாடு­களின் உத­வி­யுடன் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­டது. யுத்த வெற்றி அரச வெற்­றி­வா­த­மா­கவும் சிங்­கள பௌத்த தேசி­யத்தின் எழுச்சி மிக்க வெற்­றி­யா­கவும் கொண்­டா­டப்­பட்டு, அது வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. 

இந்தப் பின்­ன­ணி­யி­லேயே, யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள பௌத்த தேசிய தீவி­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. தொடக்­கத்தில் சிங்­க­ள­வர்கள் மதம் மாற்­றப்­ப­டு­கினறார்கள் என்ற குற்­றச்­சாட்டில் கிறிஸ்­தவ அமைப்­புக்­க­ளுக்கு எதி­ராக ஆங்­காங்கே நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் பின்னர் முஸ்­லிம்­களின் முன்­னேற்­ற­க­ர­மான வர்த்­தக நிலை­யங்கள் மீது இனந் தெ­ரி­யாத வகை­யி­லான தாக்­கு­தல்­க­ளாக மாறின. 

இந்தத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து சிங்­கள பௌத்த தேசி­யத்தை வரித்­துக்­கொண்டு தோற்றம் பெற்ற பௌத்த மத தீவி­ர­வாத அமைப்­புக்கள் பகி­ரங்­க­மா­கவே முஸ்­லிம்­களின் நடைஉடை கலாச்­சா­­ரங்­க­ளுக்கு எதி­ராகக் கண்­டனக் குரல் எழுப்பி, மத ரீதி­யான வெறுப்­பு­ணர்வு பிரச்­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தன. குறிப்­பாக பொது­பல சேனா இந்த மத வெறுப்­பு­ணர்வுப் பிர­ச்சா­ரத்­திலும், முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான மத­வாத நட­வ­டிக்­கை­க­ளிலும் முன்­ன­ணியில் திகழ்ந்­தது. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக 2012 ஆம் ஆண்டில் ஆரம்­ப­மா­கிய  மத­வாத, இன­வாத போக்கு 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பெரும் வன்­மு­றை­யாக வெடித்­தது.  

தென்­மா­காணம் களுத்­துறை மாவட்­டத்தில் இடம்­பெற்ற இந்த வன்­மு­றையில் 4 பேர் கொல்­லப்­பட்­டனர். எண்­ப­துக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர். அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­ நகர் ஆகிய நக­ரங்­களில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் வீடுகள் என்­பன தாக்கி நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டன. இந்த வன்­மு­றை­களில் 2 ஆயிரம் சிங்­க­ள­வர்கள் உட்­பட 10 ஆயிரம் பேர் அக­தி­க­ளாக்­கப்­பட்­டனர். கோடிக்­க­ணக்­கான ரூபா பெறு­ம­தி­யான உடை­மைகள் சேத­மாக்கி அழிக்­கப்­பட்­டன. 

ஒரு சிறிய சம்­ப­வத்தின் எதி­ரொ­லி­யாக பொது­பல சேனா அமைப்­பினர் அளுத்­கம, பேரு­வளை, தர்­கா­நகர்  போன்ற நகர வீதி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத, மத­வாத கோஷங்­களை எழுப்­பிய வண்ணம் நடத்­திய பேர­ணி­களைத் தொடர்ந்து வன்­முறை வெடித்­தது. முஸ்­லிம்கள் மீதான தாக்­கு­தல்கள் ஆரம்­ப­மா­கின. 

தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் கிழக்கு மாகாணம் அம்­பா­றையில் உள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ரு­டைய உண­வ­கத்தில், கருத்­தடை மருந்து கலந்த உணவு சிங்­கள மக்­க­ளுக்கு விற்­கப்­ப­டு­வ­தாகப் பரப்­பப்­பட்ட வதந்­தி­யை­ய­டுத்து, முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டன. அத­னை­ய­டுத்து, மார்ச் மாதம் மத்­திய மாகாணத் தலை­ந­க­ரா­கிய கண்­டியில் தெல் ­தெ­னிய உடிஸ்­பத்­துவ, திகன, தென்­னக்­ கும்­புர ஆகிய இடங்­களில் இடம்­பெற்ற வன்­மு­றைகள் வர்த்­தக பொரு­ளா­தார ரீதி­யா­கவும், சமூகம் மற்றும் ஆன்­மீக ரீதி­யா­கவும் முஸ்­லிம்­க­ளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தின. இந்த வன்­மு­றைகள் இடம்­பெற்று சுமார் 12 மாதங்­களின் பின்னர் உயிர்த்த ஞாயிறுதின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து, இப்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் வடமேல் மாகா­ணத்தின் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகு­தி­களில் அரங்­கேற்­றப்­பட்­டி­ருக்­கின்­றன. 

பேரின வன்­மு­றையா, சிங்­கள பௌத்த தேசிய பயங்­க­ர­வா­தமா?

பேரி­ன­வாத மேலா­திக்க அர­சியல் வழித் ­த­டத்தில் சிறு­பான்மை இன மக்கள் தங்­க­ளுக்குட்­பட்­ட­வர்­க­ளாக, ஆட்­பட்­ட­வர்க­ளாக இருக்க வேண்டும் என்ற கொள்கை பிடிப்பில் பேரி­ன­வாத அர­சியல் தலை­மைகள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. அந்த நட­வ­டிக்­கைகள் பகி­ரங்­க­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதே­வேளை மறை­முக நிகழ்ச்சி நிரல்­களின் ஊடாக இரா­ஜ­தந்­திர உத்­தி­க­ளையும், பல்­வேறு பல்­வேறு தந்­தி­ரோ­பாய அர­சியல் நுணுக்­கங்­க­ளையும் பயன்­ப­டுத்தி காரி­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.  

இந்த நட­வ­டிக்­கை­களும், பேரி­ன­வாத அர­சியல் போக்கும் நாட்டின் பன்­மு­கத் ­தன்­மையைக் குழி­தோண்டிப் புதைத்­தி­ருக்­கின்­றன. இனம், மதம், மொழி சார்ந்த மேலாண்மை அர­சியல் போக்கில் தமது கொள்­கை­களை நடை­மு­றைப்­ப­டுத்தி, இலக்­கு­களைச் சென்­ற­டை­வ­தற்­காக எத­னையும் செய்ய பேரி­ன­வா­தி­க­ளான அர­சியல் தலை­வர்கள் தயா­ராக இருக்­கின்­றார்கள். இதற்­காக உண்­மையை இல்லை என்­பார்கள். பொய்யை அப்பட்டமான உண்­மை­யென வலி­யு­றுத்­து­வார்கள். 

தமிழ், சிங்­கள, முஸ்லிம் ஆகிய மூன்று சமூ­கத்­தி­னரும், ஐக்­கி­ய­மா­கவும், சமா­தா­ன­மா­கவும் ஒத்­தி­சைந்து சக­வாழ்வு வாழ்க்கை வாழ்ந்து வந்த போதிலும், மேலா­திக்க நிலைப்­பாட்டில் காதல் கொண்­டுள்ள பேரி­ன­வா­திகள், பெரும்­பான்மை இனம், செல்­வாக்குமிக்க வளத்தைப் பயன்­ப­டுத்தி சுய அர­சியல் இலா­பத்­திற்­காக இன­வாத, மத­வாத அர­சியல் போக்கைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றார்கள். 

குறிப்­பாக முஸ்லிம் மக்­களின் இயல்­பான இனப் பெருக்க நடை­மு­றை­யா­னது, இனப் ­ப­ரம்பல் அடிப்­ப­டை­யி­லான தமது மேலாண்மை சம நிலையைக் குலைத்­து­வி­டுமோ என்ற அச்சம் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­க­ளிடம் நிறை­யவே உண்டு. அத்­துடன் சிறு­வி­யா­பாரம் தொடக்கம் பாரிய வர்த்­தக நட­வ­டிக்கைள் வரை­யி­லான அனைத்து வணிகச் செயற் ­பா­டு­க­ளிலும் முன்­ன­ணியில் திகழ்­கின்ற முஸ்­லிம்­களின் போக்கு வளர்ச்சிப் பாதையில் செல்­வ­தால், தாங்கள் பொரு­ளா­தா­ரத்­திலும் வணி­கத்­து­றை­யிலும் பின்­ன­டைவைச் சந்­திக்க நேரிடும் என்ற கரி­ச­னையும் அவர்­க­ளிடம் உள்­ளது.

மூன்­றா­வது முக்­கி­ய­மான காரணம். இது பேரி­ன­வா­தி­களின் இருப்பு குறித்த அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. குறிப்­பாக சவூதி அரே­பிய நாட்டின் முஸ்லிம் கலா­ச்சா­ரமும், பண்­பாடும் இலங்கை முஸ்லிம் மக்­க­ளு­டைய வாழ்க்­கையில் பெரும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. அதே­வேளை மதரீதி­யான அவர்­களின் அரே­பிய நாட்டுச் சாயல் கொண்ட வளர்ச்­சியும் தங்­க­ளுக்கு எதிர்­கா­லத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தவல்­லது என்ற உணர்வும் சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தி­க­ளான அர­சியல் தலை­வர்­க­ளிடம் நிறை­யவே உண்டு. 

முஸ்­லிம்­களின் மத வளர்ச்­சிக்கும் மதரீதி­ யான கலா­சாரம் மற்றும் கல்வி வளர்ச்­சிக்கும் சவூதி அரே­பிய நாட்டின் நிதி­யு­தவி மற்றும் பங்­க­ளிப்பு என்­பன சிங்­கள பௌத்த தேசி­ய­வா­தத்­திற்கு அச்­சு­றுத்­த­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது. 

சவூதி அரே­பியா நாட்டின் நிதி­யு­த­வியில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பள்­ளி­வா­சல்கள், அவர்­களின் சமய காலா­ச்சார முன்­னேற்ற நட­வ­டிக்­கைகள் என்­பன சிங்­கள பௌத்த பேரி­னவா­தி­ க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­தி­ருப்­ப­தா­கவே அவர்கள் கரு­து­கின்­றார்கள். அத்­துடன், முஸ்லிம் பெண்­களின் கலா­சார ரீதி­யான உடை­க­ளும்­கூட, ஓர் அச்­சு­றுத்­த­லா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. இந்த நிலை­யில்தான் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­ப­டு­வ­தாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. 

அதே­வேளை, அண்­மையில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களின் மூலம் நாட்டின் ஸ்திரத்­தன்­மையைக் குலைத்து, அதனை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் கையாள முடியாமல் போயுள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கும் தொடர்ந்து உடனடியாகப் பொதுத் தேர்தல் நடத்துவதற்குமான ஓர் உத்தியாகவே இந்த வன்முறைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாகவும் ஓர் அரசியல் பார்வை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

எது எப்படி இருப்பினும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட் டத்தைப் பயங்கரவாதமாக சித்திரித்த பேரின அரசியல்வாதிகளும் அரச தலைவர்களும், நாட்டில் புலிப்பயங்கரவாதம் இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து வருடங்களாகிவிட்ட நிலையில் தொடர்ச்சியாக சிறுபான்னை இன மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுகின்ற ஒரு போக்கில் திளைத்திருந்த அவர்கள், ஐஎஸ்ஐஎஸ் உலக பயங்கரவாத அமைப்பின் உலக பயங்கரவாதம் உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களுடன் நாட்டில் கரையேறியிருப்பதைக் கண்டு திகைத்துப் போனார்கள். ஆயினும், அந்த உலக பயங்கர வாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண் டிருக்க, இந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, முஸ்லிம்கள் இனவாத போக்கி லும், மதவாத போக்கிலும் தட்டி, அடக்கி வைத்திருப்பதற்கான ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டிருக்கின்றது.  

புலிப் பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம். அந்த வழியில், ஐஎஸ் பயங்கரவாதத்தை முற்றாக இல்லா தொழிப்போம் என கூறிக்கொண்டு, முஸ்லிம் களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இடமளித் திருப்பதை வெறுமனே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை என்று வரையறுத்துவிட முடியாது. 

எந்தவித தூண்டுதலுமின்றி அப்பா விகளை, உயிர்த்த ஞாயிறுதின தற் கொலைத் தாக்குதல்களின் மூலம் கொன் றொழித்திருப்பது பயங்கரவாதம் என்றால், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியவர்களையும் அவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் அரச படைகள் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கும் ஒரு சந்தர்ப் பத்தில், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படாத அப்பாவிகளான முஸ்லிம்களைத் தேடிச் சென்று தாக்குவதும், அவர்களின் உடைமைகளை சேதப்படுத்தி நிர்மூலமாக்குவதும் பயங்கர வாதம்தானே? இதனை சிங்கள, பௌத்த தேசியவாதப் பயங்கரவாதம் என்று கருதுவதில் தவறிருக்க முடியாதல்லவா?

பி.மாணிக்­க­வா­சகம்