இங்கிலாந்தின் லிவர்பூரில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஆசிய சம்பியனாக பங்குபற்றவுள்ள இலங்கை வலைபந்தாட்ட அணி, இன்று இரவு 8 மணிக்கு  பொட்ஸ்வானா புறப்பட்டுச் செல்லவுள்ளது

‘‘இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தவொரு உலகக் கிண்ண அத்தியாயத்திலும் இலங்கை ஒரு வெற்றியைத்தானும் பெற்றதில்லை. இம்முறை இரண்டு வெற்றிகளை ஈட்டிக்கொடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு பொட்ஸ்வான செல்கின்றோம். அத்துடன் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இங்கிலாந்து சென்று அங்கும் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அங்குள்ள சுவாத்தியத்துக்கு ஏற்ப வீராங்கனைகளைத் தயார்படுத்துவதும் இதன் நோக்ககுமாகும்’’ என பொட்ஸ்வானா புறப்படுவதற்கு முன்னர் அணி பயிற்றுநர் திலக்கா ஜினதாச தெரிவித்தார்.

பொட்ஸ்வானாவில் தேசிய அணி மற்றும் கனிஷ்ட தேசிய அல்லது கழக அணிகளுடன் 6 போட்டிகளில் இலங்கை அணி மோதவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் ஸிம்பாப்வே, வட அயர்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் இலங்கையும் இடம்பெறுகின்றது.

‘‘ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான ஸிம்பாப்வேயை வெற்றிகொள்ள வேண்டுமானால் ஆபிரிக்க வலைபந்தாட்ட ஆற்றல்களை அறிந்துகொள்வது மிக அவசியம். இதனைக் கருத்தில் கொண்டே இலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானாவில் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவுள்ளது’’ என 1997இல் ஆசிய சம்பியனான இலங்கை அணியின் உதவித் தலைவியாக விளையாடிய திலக்கா ஜினதாச குறிப்பிட்டார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஒரு மாதத்துக்கு முன்னர் நடைபெற்ற நான்கு முனை சர்வதேச வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியில் பிரதான வீராங்கனைகள் இருவர் இடம்பெறாதமை பாதகமான பெறுபேறுகளைத் தந்ததாக பயிற்றுநர் சுட்டிக்காட்டினார்.

பொட்ஸ்வான செல்லும் வீராங்கனைகள் அனைவரும் பூரண உடற்தகுதியுடன் இருப்பதாகவும் உபாதைக்குள்ளாகியிருந்த கயனி திசாநாயக்க மீண்டும் குழாத்தில் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.

அவுஸ்திரேலியாவில் தொழில்சார் கழக வலைபந்தாட்டப் போட்டிகளில் விளையாடிவரும் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை அணியினருடன் துபாய் விமான நிலையத்தில் அல்லது பொட்ஸ்வானாவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை வலைபந்தாட்டக் குழாத்தில் சத்துரங்கி ஜயசூரிய (அணித் தலைவி), கயனி திசாநாயக்க (உதவி அணித் தலைவி), தர்ஜினி சிவலிங்கம், தர்ஷிகா அபேவிக்ரம, ஹசிதா மெண்டிஸ், தீப்பிகா தர்ஷனி, திலினி வத்தேகெதர, கயஞ்சலி அமரவன்ச, நௌஷாலி ராஜபக்ஷ, துலங்கி வன்னிதிலக்க, துலங்கா தனஞ்சி, எலிழேந்தி சேதுகாவலர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

அணி முகாமையாளராக ட்ரிக்ஸி நாணயக்காரவும் குழு அதிகாரியாக புஷ்பா எலுவாவவும் சென்றுள்ளனர்.

(நெவில் அன்தனி)