பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

2019 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஒரு இருபதுக்கு - 20, ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இடம்பெற்றது.

இதில்  இருபதுக்கு 20 தொடரை தனதாக்கிய இங்கிலாந்து ஏற்கனவே நடைபெற்று முடிந்த ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று 3:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியிருந்தது. 

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்றைய தினம் ஹெட்டிங்லேயில் இடம்பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டினை இழந்து 351 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 73 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டம் அடங்கலாக 84 ஓட்டத்தையும், அணித் தலைவர் மோர்கன் 64 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டம், நான்கு 4 ஓட்டம் அடங்களாக 76 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுக்களையும், இமாத் வாசிம் 3 விக்கெட்டுக்களையும், ஹசான் அலி, மொஹமட் ஹுசேன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

352 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பாகிஸ்தான் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களும் 6 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டது.

பஹார் ஜமான் டக்கவுட்டுடனும், அபித் அலி 5 ஓட்டத்துடனும் மற்றும் மொஹமட் ஹபீஸ் டக்கவுட்டுடனும் கிறிஸ் வோக்ஸின் அபார பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் மற்றும் பாபர் அசாம் ஜோடிசேர்ந்தாடி அணியை வலுவான நிலைக்கு கொண்டு சேர்க்க முயன்றனர். 

எனினும் 26.2 ஆவது ஓவரில் பாபர் அசாம் 80 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார் (152-4). அதன் பின்னர் வந்த மலிக்கும் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, சர்ப்ராஸ் அஹமட் 80 பந்துகளை எதிர்கொண்டு 2 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்கலாக 97 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பினை நழுவ விட்டார் (232-7).

இதன் பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற, இறுதியாக பாகிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 297 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 54 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுக்களையும், அடில் ரஷித் 2 விக்கெட்டையும், டேவிட் வில்லி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத் தொடரானது ஆரம்பமாவதற்கு முன்னதாக பாகிஸ்தான் அடைந்துள்ள இந்த தொடர் தோல்வி பாகிஸ்தான் அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.